சென்னை: மிக் ஜாம் புயல் மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழ்நாடு முழுவதும் 3,00,000 மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மிக் ஜாம் புயலால் அதிகம் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படும் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,650 மின் கம்பங்கள், 450 கி.மீ. தாழ்வழுத்த மின் கம்பிகள் மற்றும் 40 மின்மாற்றிகள் தற்போது தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மின்வாரியம் எந்தளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பது பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது;
''முதலமைச்சர் நேற்று முன்தினம் அறிவுறுத்தியதைப் போல, இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புயலின் காரணமாக மிக அதிகமான கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் கருதப்படுவதால், கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய துறையின் அதிகாரிகளுக்கு அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மின் வாரிய அதிகாரிகள் எல்லா இடத்திலும் தயார் நிலையில் இருக்கின்றனர். மின் தடை ஏதும் ஏற்படாமல் உடனடியாக சூழ்நிலையை சமாளிக்க கூடிய அளவிற்கு களப்பணியாளர்களையும் தளவாடப் பொருட்களையும் நாங்கள் இப்போது சேமித்து வைத்துள்ளோம். எந்த சூழ்நிலையும் சமாளிக்கக் கூடிய வகையில் தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரி, ஜேசிபி மற்றும் கிரேன் போன்ற வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே 3,00,000-ற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் தயாராக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 3,650 மின் கம்பங்கள், 450 கி.மீ. தாழ்வழுத்த மின் கம்பிகள் மற்றும் 40 மின்மாற்றிகள் தற்போது தயாராக இருக்கிறது. களப்பணியாளர்கள் பொருத்த மட்டில் 1,500 நபர்கள் தயாராக வைத்துள்ளோம். இந்த துணைமின் நிலையத்தில் ஏறத்தாழ 350 களப்பணியாளர்களை மின் சீரமைப்பு பணிகளுக்காக வைத்துள்ளோம்.
அதே போல, மிகை உயர் மின்னழுத்தப் பாதைகளைப் பொருத்தமட்டில் 15 கி.மீ. மின் கம்பிகள், 1,000 இன்சுலேட்டர்கள் மற்றும் மிகை உயர் மின்னழுத்தப் பணி செய்யக்கூடிய பணியாளர்களையும் இங்கே தயார்நிலையில் வைத்திருக்கிறோம். ஆக எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணி புரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள்.
முக்கியமாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, மருத்துவமனை, தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றிற்கு மின்சாரம் தடைப்படாமல், முன்னுரிமை அடிப்படையில் சீரான மின்விநியோகம் வழங்கிட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதின் பேரில் இன்றைக்கு இந்த துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ''