புதுக்கோட்டையிலிருந்து அரை சவரன் தங்க நகை.. பரிதாப பெண்ணும், பதறி உளறிய கணவரும்! கலங்கிய கறம்பக்குடி

post-img

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இளம்பெண்ணுக்கு என்ன நடந்தது? யார் இந்த குற்றச்செயலை செய்தது என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இறுதியில் 20 வயது இளைஞர் ஒருவர் சிக்கி உள்ளார். இதற்கு நடுவில் கணவரின் வாக்குமூலமானது போலீசாருக்கு மிகப்பெரிய குழப்பத்தை தந்துவிட்டது. என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ளது புளியஞ்சோலை.. இங்கு வசித்து வரும் தம்பதி பைசூர் ரகுமான் - சகுபர் நிஷா.. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. சகுபர் நிஷாவுக்கு 23 வயதாகிறது.
ஏற்கனவே ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், இப்போது சகுபர் நிஷாவுக்கு 2வது குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகிறது.. இதனால், இலுப்பூரில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு பிரசவத்துக்கு சென்ற சகுபர் நிஷா, 3 நாட்களுக்கு முன்புதான், கணவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

2வது பிரசவம்: அதாவது, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழவை சிறப்பாக நடத்திவிட்டு, அதற்கு பிறகு குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.. நேற்றுமுன்தினம் இரவு, மர்மமான முறையில் சகுபர்நிஷா கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சகுபர் நிஷா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.
அத்துடன், சகுபர் நிஷாவின் விலாவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார். இதையடுத்து, தகலறிந்த கறம்பக்குடி போலீசார், விரைந்து வந்து சகுபர்நிஷாவின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
குடும்ப பிரச்சனை: இதில் முதல் விசாரணையே கணவர் பைசூர் ரகுமான்தான்.. அவரை பிடித்து போலீசார் கடந்த 2 நாட்களாகவே விசாரணை செய்து வந்தனர். அப்போது அவர், தன்னுடைய மனைவியை குடும்ப பிரச்சனை காரணமாக தான் தான் கத்தியை வைத்து குத்தி கொன்றுவிட்டதாக போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். உடனே போலீசார், எதற்காக மனைவியை கொலை செய்தார்? என்று கேட்டுள்ளனர்.

ஆனால், இதற்கு பைசூர் ரகுமான் சரியான பதிலை சொல்லவில்லை.. தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, "நான் என்னுடைய மனைவியை கொலை செய்யவில்லை.. போலீசுக்கு பயந்து தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டேன்" என்றார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உண்மையிலேயே சகுபர் நிஷாவை யார் கொலை செய்தார்கள் என்று தீவிர விசாரணையை கையில் எடுத்தனர்.
சிசிடிவி கேமரா: இது தொடர்பாக மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தனிப்படை அமைத்து கொலையாளியை பிடிக்க உத்தரவிட்டார்... மற்றொருபுறம் சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் டவர் உதவியுடன் தீவிர விசாரணையும் ஆரம்பமானது. கொலை செய்யப்பட்ட வீடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் போலீசார் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, பைசூர் ரகுமான் வீட்டிற்கு பின்புறம் வசித்து வரும் முகமது முகமது அபு உஸ்மான் என்ற 20 வயது இளைஞரின் உடையில் ரத்தக்கறை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த ரத்த கறை உடையை போலீசார் கைபற்றியதுடன், முகமது அபு உஸ்மானையும் கைது செய்து விசாரணை நடத்தினர்... அப்போதுதான், சகுபர் நிஷா அணிந்திருந்த அரை பவுன் நகைக்காக, அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் தந்தார். அத்துடன் நிஷாவை குத்திய கத்தியை, கறம்பக்குடி பெரியாற்று பாலம் அருகே ஒளித்து வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் முகமது அபு உஸ்மான் கூறினார்.

ஆற்றுப்பாலம்: இதனால் போலீசார், அவரை அழைத்துக் கொண்டு கத்தியை எடுப்பதற்காக பெரியாற்று பாலம் நோக்கி சென்றனர்.. அக்னி ஆற்றுப்பாலத்தின்மீது இவர்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தபோது, இயற்கை உபாதை கழிப்பதாக போலீசாரிடம் சொன்ன முகமது அபி உஸ்மான், திடீரென அந்த பாலத்திலிருந்து எகிறி குதித்தார். இதனால் பதறிப்போன போலீசார் அவரை மீட்க முயன்றனர்..
ஆனால், கீழே குதித்த முகமது அபி உஸ்மானுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. இதனால் பாலத்திலிருந்து எகிறி குதித்தும் அவரால் தப்பியோட முடியவில்லை.. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தந்து, பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்..
புதுக்கோட்டை பரபரப்பு: காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால், இன்னும் குணமடையவில்லை. தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. அவருக்கு கால் குணமடைந்த பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர். 23 வயது இளம்பெண், வெறும் அரை பவுன் நகைக்காக விலாவில் குத்தி கொன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post