"தமிழகத்தில் தான் வறுமை மிக குறைவு.. இது எப்படி சாத்தியமாச்சு தெரியுமா?" எளிமையாக விளக்கிய ஜெயரஞ்சன்

post-img
சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வறுமை குறைவாக இருப்பதாக மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் சராசரி வருவாய் என்பது தேசிய வருவாயைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே வளர்ந்த ஒரு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. கல்வி அறிவி, தேசிய சராசரி வருவாய் உள்ளிட்டவற்றில் தமிழகம் சிறந்த நிலையில் இருக்கிறது. இதற்குக் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தோர் அமல்படுத்திய பல்வேறு திட்டங்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். ஜெயரஞ்சன் பேச்சு: இது தொடர்பாகச் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், "பொதுவாக இங்கே ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது நம்ம ஊரில் வேலை செய்யும் ஆட்கள் இல்லை. எல்லாம் சோம்பேறிகள் ஆகிவிட்டார்கள். இதன் காரணமாகவே வடமாநில இளைஞர்கள் இங்கு வந்து வேலை செய்வதாகச் சொல்வார்கள். ஆனால், இது குறித்து ஆய்வு செய்யும் போது நமக்கு முடிவுகள் வேறு விதமாகக் கிடைக்கிறது. அதாவது இந்தியாவிலேயே கருவுறுதல் விகிதம் தமிழ்நாட்டில் தான் மிகக் குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் இப்போது குழந்தை பிறப்பு விகிதம் 1.4ஆக இருக்கிறது. அதாவது 1000 பெண்கள் இங்கே 1400 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் வேலை செய்யும் வயதில் இருப்போரின் எண்ணிக்கை குறைகிறது. தமிழ்நாட்டில் கல்வி: அடுத்து கல்வி பரவல் ஆகிறது. அதாவது தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் அனைத்து தரப்பு பெண்களும் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர். உதாரணமாகப் புதுமைப் பெண் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இதனால் கல்லூரிகளில் அட்மிஷன் என்பது 33% வரை அதிகரித்து இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்.. இங்கே பள்ளி மட்டும் படித்துவிட்டு வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை இந்தளவுக்குக் குறைந்து இருக்கிறது என்றே அர்த்தம். அதாவது அந்த லெவலில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை: நம்ம மாநிலத்தில் கல்லூரில் சேர்வோர் விகிதம் 52%ஆக இருக்கிறது. அதாவது 16- 30 வயதில் இருப்போரில் சுமார் 50% பேர் கல்லூரியில் மாணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் உங்களிடம் தொழிலாளியாக வேலைக்கு வரத் தயாராக இல்லை. ஏற்கனவே ஒரு பக்கம் மக்கள்தொகை சரிகிறது. அதில் 50%க்கு மேல் படிக்கிறார்கள். இதனால், மீதமுள்ளவர்கள் மட்டுமே மார்கெட்டில் இருக்கிறார்கள். இப்படி அவர்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அவர்கள் எங்கே தனக்கு ஏற்ற சம்பளம் கிடைக்கிறதோ.. அங்கு தான் செல்கிறார்கள். தமிழகத்தில் தான் வறுமை குறைவு: இதுபோல பல காரணங்களால் வறுமை என்பது இந்தியாவிலேயே இன்று தமிழ்நாட்டில் தான் குறைவாக இருக்கிறது. Multidimensional poverty index எனப்படும் வறுமை என்பது நாட்டிலேயே குறைவாக 1.5 முதல் 2% சதவீதமாகத் தமிழகத்தில் இருப்பதாக நிதி ஆயோக் குறிப்பிடுகிறது. கேரளாவில் இதை விடச் சற்று குறைவாக இருக்கிறது. வரலாறு ரீதியாக எடுத்துப் பார்த்தோம் என்றால் ஒரு காலத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தில் உள்ளவர்களின் வருவாய் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக இங்கே வருவாய் அதிகமாக இருக்கிறது" என்றார்.

Related Post