வட மாவட்டங்களை புரட்டி எடுத்த ஃபெஞ்சல் புயல்! பாதிப்பு குறித்த ஆய்வை தொடங்குகிறது மத்திய குழு!

post-img

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயல், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. புயல் கரையை கடந்து ஏறத்தாழ 10 நாட்கள் ஆகியும் கூட, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. இந்நிலையில் மத்திய அரசின் குழு இன்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது.
வழக்கமாக புயல் கரையை கடந்த பின்னர் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் வேகமாக நகர்ந்துவிடும். ஆனால் ஃபெஞ்சல் விஷயத்தில் சின்ன வித்தியாசம் இருந்தது. புயல் மரக்காணத்தை ஒட்டி கரையை கடந்த பின்னர், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்தது. எனவே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழையை கொடுத்தது.

20 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அதை ரெட் அல்ர்ட் என்று வானிலை மையம் குறிப்பிடும். ஆனால், விழுப்புரத்தில் சுமார் 51 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. அப்படியெனில் மழையின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கனமழை காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. விழுப்புரத்தின் அரசூர் எனும் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் வெள்ளம் 3 அடி வரை தேங்கியது.இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
அதேபோல விக்கிரவாண்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் வந்து சேர வேண்டிய ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் வழியாக மாற்றிவிடப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பு இருந்தாலும், அடுத்த ஓரிரு நாட்களில் இந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. ஆனால், விழுப்புரம் இன்றும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு 10வது நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று சென்னை வந்திருந்தது. இக்குழு இன்றும் நாளையும் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. முன்னதாக, வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6675 கோடி ரூபாய் வழங்க மத்திய குழு பரிந்துரைத்திட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Related Post