சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்மொழி என்ற பெண்ணும், அவரது நண்பர் சரவணனும் சேர்ந்து அருள்மொழியின் கணவர் தனவேலை தலையணையை போட்டு அமுக்கி தீர்த்துக்கட்டியதாக கடந்த அக்டோபர் மாதம் கைதாகினர். அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் தனவேல் கூலித்தொழிலாளியாவர். தனவேலுக்கும் மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த 33 வயதாகும் அருள்மொழி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி தனவேல் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தனவேல் குடிபோதையில் உணவு சாப்பிடாமல் இறந்து விட்டதாக அவரது மனைவி அருள்மொழி கூறினார். முதலில் சந்தேக மரணம் என்கிற பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணையை போலீசார் தொடங்கினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், தனவேல் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து போலீசாரின் சந்தேக பார்வை அருள்மொழி மீது விழுந்தது. இதையடுத்து அருள்மொழியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது, அருள்மொழி தனது நண்பரான வடக்கனந்தல் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் (31) என்பவருடன் சேர்ந்து தனவேலை தீர்த்துக்கட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அருள்மொழியிடம் விசாரித்த போது, அவருக்கும், அவரது கணவர் தனவேலுக்கும், அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்மொழியின் தந்தை கலியமூர்த்தி விஷ சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். அப்போது தான் சரவணனின் ஆட்டோவில் , அவரது தந்தையை பார்க்க அடிக்கடி சென்று வந்தாராம். இதனால் அருள்மொழிக்கும் சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் தனவேலுக்கு தெரியவந்ததால், அருள்மொழியை கணவர் கண்டித்து வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி அருள்மொழியும், சரவணனும் மாதவச்சேரி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் தனிமையில் இருந்தார்களாம். பின்னர் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது, கணவர் தனவேல் சண்டை போட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அருள்மொழி கணவரை கொலை செய்ய திட்டமிட்டாராம். இதற்காக சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து, தொடர்ந்து இருவரும் சேர்ந்து அருள்மொழியின் கணவரின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சரவணன் அங்கிருந்து சென்று விட்டாராம். தனது கணவருக்கு குடிபழக்கம் இருப்பதால், மதுபோதையால் இறந்துவிட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்த அருள்மொழி மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அருள்மொழி, அவரது நண்பர் சரவணன் ஆகியோரை கச்சிரப்பாளையம் போலீசார் கொலை வழக்கில் கடந்த அக்டோபர் 17-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் எம்.செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் அருள்மொழியின் கணவர் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்ததால் தான் மரணமடைந்துள்ளார். ஆனால், கள்ளக்காதலன் சரவணனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
காவல் துறை தரப்பில், கணவனின் முகத்தில் தலையணையை போட்டு அமுக்கி அருள்மொழியும், அவரது நண்பர் சரவணனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, "அக்டோபர் மாதம் முதல் சிறையில் உள்ளதால் இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன். அருள்மொழி ஆத்தூரிலும், சரவணன் செங்கல்பட்டிலும் தங்கியிருந்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டும்" என்று உத்தரவிட்டார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.