சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.. விஜய் பேச்சு

post-img

சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், "சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதிலும், அறிக்கை விடுவதிலும் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்ல" என்று கூறியுள்ளார். இக்கருத்து அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இது அந்த அரசியல் கட்சியின் இருப்பை ஒருவகையில் உறுதி செய்து வருகிறது. எல்லா பிரச்சனைகளுக்கும் போராட்டம் என்பது சாத்தியமில்லாமல் இருக்கும் காலம் இது. எனவே அரசியல் பிரச்னைகள் குறித்து கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் தங்கள் கருத்தை அறிக்கை வாயிலாகவும், சோஷியல் மீடியா மூலமாகவும் வெளிப்படுத்தி வருகிறது.

இது ஒரு வகையில், அக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்குவதாகவே இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ஆயிரம் தொண்டர்களுக்கு கட்சியின் நிலைப்பாட்டை கொண்டு சேர்க்கும் வழியாக அறிக்கைகள் இருக்கின்றன. எனவேதான் அரசியல் கட்சிகள் தங்கள் நடைமுறைகளை எவ்வளவு மாற்றினாலும், அறிக்கை விடுவதை மட்டும் மாற்றுவது கிடையாது. ஏனெனில் அது தொண்டர்களுடனான ஒரு தொடர்பு. இப்படி இருக்கையில்தான் அறிக்கை விடுவது குறித்து விஜய் பேசியிருப்பத பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புத்தகத்தை விஜய் வெளியிட்டிருந்தார். அப்போது சிறப்புரையாற்றிய அவர் திமுக குறித்தும் விமர்சித்திருந்தார். மட்டுமல்லாது அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவது குறித்து,
"அரசியல் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், அறிக்கை விடுவதும், மழை தண்ணியில் நின்று போட்டோ எடுப்பதன் மூலம் மக்களுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. என்ன செய்வது நாமும் சம்பிரதாயத்துக்கு சில நேரங்களில் அப்படி செய்யவேண்டியுள்ளது. மக்களுடன் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் என்ன பிரச்சினை நடந்தாலும், அவர்களின் உரிமைகளுக்காவும், உணர்வுபூர்வமாகவும் எப்போதும் இருப்பேன்" என்று பேசியிருக்கிறார்.

விஜய்யின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அரசியல் கட்சிகளின் முதல் இலக்கு தங்கள் தொண்டர்களை அரசியல்படுத்துவதுதான். தொண்டர்கள் எந்நேரமும் அரசியல் தலைவர்களின் பேச்சுகளையும், புத்தகங்களையும் படித்துக்கொண்டே இருக்கமாட்டார்கள். நடைமுறை யதார்த்தத்தில் அவரவர் தங்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதிலேயே நேரம் கழிந்துவிடுகிறது. அப்படியான தொண்டர்களுக்காவே அறிக்கைகள் இருக்கின்றன. ஒன்றிரண்டு பக்கம் அறிக்கையை படிப்பதன் மூலம் கட்சியின் நிலைப்பாட்டை தொண்டர்களால் எளிதாக புரிந்துக்கொள்ள முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த அறிக்கைகளே சம்பிரதாயத்திற்கானது என்று விஜய் பேசியிருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

Related Post