மிசோரத்தில் ரெண்டு சீட்டில் ஆட்சியை தக்கவைக்கும் மிசோ தேசிய முன்னணி!

post-img

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மீண்டும் ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என 'ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ்' (Republic TV-Matrize) கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் இருக்கின்றன. இங்கு ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு கடந்த 7ம் தேதியன்று நடைபெற்றது. இம்மாநிலத்தில் பாஜக பெயரளவில் இருந்தாலும், ஆட்சியில் இருக்கும் மிசோ தேசிய முன்னணி தேசிய அளவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்திருக்கிறது. எனவே பாஜகவும் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது.
அதேபோல கடந்த 1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது.
ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி முதன் முறையாக 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. இது தவிர 27 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். மிசோ தேசிய முன்னணி தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா, ஐஸ்வால் கிழக்கில் போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இப்படி இருக்கையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளன.
மிசோரம் சட்டசபை தேர்தல் 2023: ஆட்சியை தக்கவைக்கும் 'மிசோ தேசிய முன்னணி'! வெளியானது கருத்துக்கணிப்பு
அதாவது, எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 7-12 தொகுதிகளிலும், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) 17-22 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதே போல் காங்கிரஸ் கட்சி 7-10 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக 1-2 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் 'ரிபப்ளிக் டிவி-மேட்ரைஸ்' (Republic TV-Matrize) கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி மிசோரமில் நூலிழையில் மீண்டும் மிசோ தேசிய முன்னணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மிசோரம் தேர்தல் மூலமாக காங்கிரஸ் மீண்டும் வடகிழக்கு மாநிலங்களில் தலையெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

 

Related Post