அடிபட்ட எம்.பி. ஐசியூவில்.. ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு.. போலீசில் பாஜக பரபரப்பு புகார்

post-img
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் மற்றும் பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக எம்பிக்கள் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜகவினர் ராகுல் காந்தி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யுமாறு புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சில கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், அது இப்போது பெரியளவில் அரசியல் சர்ச்சையாக வெடித்துள்ளது. அமித் ஷா பேச்சைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், காங்கிரஸ் கட்சியே அம்பேத்கரை இழிவுபடுத்தியதாகச் சொல்லி பாஜகவினர் போட்டி போராட்டத்தை நடத்தினர். இரு தரப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்பி அனுராக் தாக்கூர் போலீசில் புகார் அளித்தார். தாக்குதல், தூண்டுதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் கீழ் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி அனுராக் தாக்கூர், "ராகுல் காந்தி மீது தாக்குதல் மற்றும் வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளோம். என்டிஏ கூட்டணி எம்.பி.க்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது என்ன நடந்தது என்பதை விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். 109, 115, 117, 125, 131 மற்றும் 351 ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளோம். பிரிவு 109 கொலை முயற்சி, பிரிவு 117 தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யும்படி புகார் அளித்துள்ளோம்" என்றார். நாடாளுமன்றத்தில் இரு கட்சி எம்பிக்களும் போராட்டம் நடத்திய நிலையில், அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்பிக்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர் அஜய் சுக்லா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தேவையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிகிச்சை தொடங்கியுள்ளோம். இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பிரதாப் சாரங்கி தலையில் இருந்து அதிகளவில் ரத்தம் கொட்டியுள்ளது. காயம் ஆழமானதாக இருந்ததால் தையல் போட்டு இருக்கிறோம். அவர்களின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்" என்றார். இது ஒரு பக்கம் இருக்க பாஜகவினரால் தனக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் அவை தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post