பல்டியடித்த புதின்? சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ராஜினாமா செய்தது ஏன்? ரஷ்யா சொன்ன தகவல்

post-img

மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போரை தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத் விமானத்தில் தப்பி உள்ளார். இதனால் பஷர் அல் அசாத்தின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் பஷர் அல் அசாத் சென்ற விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் பரவி வரும் நிலையில் பஷர் அல் அசாத் சிரியா அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார் என்று ரஷ்யா உறுதி செய்துள்ளது. அதோடு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளதால் விளாடிமிர் புதின் பல்டியடித்துள்ளாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சிரியா அதிபராக இருந்தவர் பஷர் அல் அசாத். இவர் கடந்த 2000ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராகசெயல்பட்டு வந்தார். பஷர் அல் அசாத் தொடர்ந்து சர்வாதிகாரி போல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிபருக்கு எதிராக அடிக்கடி உள்நாட்டில் பல அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
அதோடு சிரியாவில் உள்நாட்டு போர் என்பது அடிக்கடி நடந்து வரும். குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டில் உள்நாட்டு போரில் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை ரஷ்யா மற்றும் ஈரான் படைகள் தான் காப்பாற்றின. இந்த உள்நாட்டு போர் 2016ல் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு போர் தீவிரமாகி உள்ளது. அந்த நாட்டின் அதிபராக உள்ள பஷர் அல் அசாத்துக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற அமைப்பினர் தலைமையில் கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கின. இவர்கள் அலெப்போ, ஹமா உள்ளிட்ட நகரை கைப்பற்றி உள்ளன. தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வரும் சூழலில் பல இடங்களில் ராணுவத்தினர், கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்தன. இதையடுத்து வேறு வழியின்றி உயிருக்கு பயந்து சிரியா அதிபர் பஷர் அல் அசாத் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விமானத்தில் வெளிநாடு தப்பினார். இந்த விமானம் பாதி வழியில் ரேடார் தொடர்பில் இருந்து விலகிய நிலையில் பஷர் அல் அசாத் எங்கு சென்றார்? அவரது விமானத்தின் கதி என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே சிலர் பஷர் அல் அசாத்தின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது வரை அது உறுதி செய்யப்படவில்லை. இதனால் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தின் நிலை என்ன? என்பதில் சஸ்பெண்ஸ் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தான் அதிபர் பஷர் அல் அசாத் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. இதுபற்றி ரஷ்யா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‛‛சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் சிரியா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய பஷர் அல் அசாத் ஒப்புக்கொண்டதோடு நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி ஆட்சி மாற்றத்தை சுமூகமாகவும் மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா ப்ஙகேற்கவில்லை. ரஷ்யா பெடரேஷன் சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளது. நாங்கள் அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கிறோம். அதோடு அவர்களின் அரசியல் சார்ந்த செயல்முறையை நிறுவ ஆதரிக்கிறோம்.'' என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சிரியா அதிபர் பஷர் அல் அசாத் எங்கு சென்றார்? அவர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அதுபற்றிய விவரங்களை ரஷ்யா தெரிவிக்கவில்லை.
மேலும் ரஷ்யாவின் இந்த தகவல் தற்போது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தும், ரஷ்யாவுக்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளது. கடந்த 2011ல் சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஒன்று திரண்டனர். அலெப்போ நகரை மொத்தமாக கைப்பற்றினர். நிலைமை எல்லை மீறி சென்றபோது. இந்த போர் 4 ஆண்டுகளை கடந்து நடந்தது. அப்போது ரஷ்யாவும், ஈரானும் தான் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு உதவி செய்தனர். ரஷ்யாவின் போர் விமான தாக்குதலுக்கு பிறகு அலெப்போ நகர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் இந்த முறையும் ஈரான், ரஷ்யாவிடம் உதவி கோரினார் அதிபர் பஷர் அல் அசாத். அதன்படி ரஷ்யா முதற்கட்டமாக கிளர்ச்சியாளர்கள் மீது சில நாட்களுக்கு முன்பு போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து சிரியா ராணுவம், கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்ததால் ரஷ்யாவால் ஒன்றும் செல்ல முடியவில்லை. இதனால் அதிபர் பஷர் அல் அசாத் தனது பதவியை ராஜினாமா செய்து விமானத்தில் பறந்துள்ளார்.
மேலும் ரஷ்யா தொடர்ந்து காலம் காலமாக சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக தான் இருந்து வந்தது. ஆனால் இன்று ரஷ்யா வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கிளர்ச்சியாளர்களின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிரியா விவகாரத்தில் அந்த நாட்டு அதிபர் பஷர் அல் அசாத்துக்கு பதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Post