சென்னை: தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், வருகிற 9 மற்றும் 10-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதற்காக சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டப்பட்ட அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனையில் பேசிய அதிமுக உதயக்குமார், "தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்து பேரவையில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. அதனால், குறைந்த பட்சம் 10 நாட்கள் பேரவை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இறுதியில், பேரவை 2 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என தெரிவித்துவிட்டார் சபாநாயகர். இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க பல பிரச்சனைகள் இருக்கிறது , இந்த நிலையில் வெறும் 2 நாட்களில் கூட்டத்தை முடிப்பது சட்டமன்ற ஜனநாயகம் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 1. அதானி விவகாரம், 2. பெஞ்சல் புயல் மழை வெள்ளம் விவகாரம், 3. சட்ட ஒழுங்கு சீர்கேடு என திமுக அரசுக்கு எதிராக பேரவையில் எழுப்ப அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
இதனையறிந்ததால்தான், கூட்டம் அதிக நாள் நடந்தால் தினந்தோறும் வெளிநடப்பு, வெளியேற்றம், கருப்புச் சட்டை அணிந்து வருதல் என எதிர்க்கட்சிகள் சர்ச்சைகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கும். இவைகள் திமுக அரசுக்கு எதிராக மக்களிடம் போய்ச் சேரும். இதனை ஆளும் தரப்பு விரும்பவில்லை. அதனால்தான் கூட்டத்தொடரை வெறும் 2 நாளாக குறைத்திருக்கிறார்கள்.
"கலைஞர் தலைமையிலான திமுக அரசு இருந்த போது, கூட்டத்தொடரை அதிக நாள் நடத்த விரும்புவார் கலைஞர். தனது ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களை எதிர்கொண்டு அவைகளுக்கு பதிலடி கொடுப்பதை விரும்புவார் ; ரசிப்பார். அதற்காகவே கூட்டத்தொடரை அதிக நாள் நடத்துவது கலைஞரின் வழக்கம். அத்தகைய வழக்கம், விருப்பம் எல்லாம் இப்போது இல்லை " என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.
எடப்பாடி பிளான்: முக்கியமாக சமீப நாட்களாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட இதை பற்றி கடுமையான புகார்களை வைத்து இருந்தார். சமீபத்தில் கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த விடியா திமுக ஆட்சியில் மருத்துவத்துறை, பள்ளிக்கல்வித்துறை, நீதித்துறை என அரசு வளாகங்களிலேயே துறை வாரியாக நடைபெறும் கொலைகள், முதல்வர் ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லும் சட்டம் ஒழுங்கின் உண்மை நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.
விளம்பரத்தில் மட்டுமே ஆட்சிக்காலத்தை நகர்த்திவிடலாம் என்ற எண்ணத்தில், தன்னுடைய பணிகளை மேற்கொள்ளாமல், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் கண்ணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
வழக்கம் போல வெற்று விளம்பரங்களால் மடைமாற்ற முயற்சிக்காமல், இத்தொடர் சம்பவங்களுக்கு பிறகாவது சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை உணர்ந்து செயல்படுங்கள். தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
விடியா திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்.. என்று கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். இதை எடப்பாடி சட்டசபையில் எழுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறாராம்.
Weather Data Source: Wettervorhersage 21 tage