சென்னை: சென்னை - மைசூரு இடையிலான அதிவேக விரைவு ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு, சாதாரண விரைவு ரயிலாக இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. அத்துடன் மேலும் சில மாற்றங்களும் இந்த ரயிலில் செய்யப்பட உள்ளது.
சென்னையிலிருந்து பெங்களூர் வழித்தடத்தில், சுமார் 26 ரயில்கள் இருமார்க்கத்திலும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.. ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் போன்ற பிரீமியம் ரயில்களும், அதிவேக விரைவு ரயில்களும் இதே வழித்தடத்தில்தான் இயக்கப்படுகின்றன.
அதிவிரைவு ரயில்: இப்படிப்பட்ட சூழலில், சென்னை சென்ட்ரல் - மைசூரு அதி விரைவு ரயில் குறித்த முக்கிய செய்தி வெளியாகியிருக்கிறது.. அதாவது, சென்னை சென்ட்ரல் - மைசூரு அதிவிரைவு ரயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. கிட்டத்தட்ட 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரயில், சராசரியாக மணிக்கு 54 கிமீ வேகத்தை கொண்டிருக்கிறது.
இந்த ரயில் முதலில், சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது இந்த அதிவிரைவு ரயில் ஜனவரி 3-ம் தேதி முதல் சாதாரண விரைவு ரயிலாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கோரிக்கை: இதற்கு காரணம், ரயிலின் குறைந்தபட்ச சராசரி வேகமான 55 கி.மீ. வேகத்தை, இந்த ரயில் பராமரிக்க தவறிவிட்டதாம். அதுமட்டுமல்ல, ரயில் பயணிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், வணிகர் சங்கங்கள் மற்றும் பிற பிரதிநிதிகள் ஆகியோர் இந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.
இந்த கோரிக்கைக்கு ஏற்ப, கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டது. இதன்காரணமாகவும், இந்த ரயிலின் சராசரி வேகத்தை பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவேதான், சாதாரண ரயிலாக இது மாற்றப்படுகிறது.
சீசன் டிக்கெட்: இதையடுத்து, இந்த ரயிலின் கட்டணமும் குறைக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னை - மைசூரு இன்டர்சிட்டி விரைவு ரயில் கட்டணம் 2ம் வகுப்பு இருக்கைக்கு ரூ.15-ம், சேர்கார் வகுப்புக்கு ரூ.45-ம் கட்டணமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விரைவு ரயிலில் பயணிப்பவர்களுக்கான சீசன் டிக்கெட் கட்டணமும் கணிசமாக குறையும் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில், சாதாரண விரைவு ரயிலாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ரயிலுக்கு நிறுத்தங்கள் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் இது பயணிகளின் வரவேற்பை இனி அபரிமிதமாக பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.