எது நோட்டாவா? ஜெயக்குமார் ஏரியாவுலயே 14 வார்டுல அதிமுகவை பின்னாடி தள்ளிட்டோம்..

post-img

சென்னை: சென்னை மாநகராட்சியில் 200 இடங்களில் போட்டியிட்டதில் 14 வார்டுகளில் பாஜக இரண்டாம் இடம் வந்தது. அதிமுக 3வது இடத்திற்குச் சென்றது. நோட்டா என்று விமர்சிப்பதெல்லாம் அந்தக் காலம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்.


அதிமுக பாஜக கூட்டணி முறிவு: "அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது எங்கள் கட்சியின் முடிவு. பாஜக தேசிய தலைமையிடம் அண்ணாமலை குறித்து தெரிவித்தும், அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்றால் மேலிடம் சொல்லி தான் இது நடக்கிறது என் நினைக்கிறேன். அண்ணாமலைக்கு தமிழ்நாட்டில் காலே இல்லை. பாஜக தமிழ்நாட்டில் கால் ஊன்றவே முடியாது. உங்களை தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை.


பாஜக தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை லாயக்கற்றவர். பாஜக தமிழ்நாட்டில் தனியாக நின்றால் நோட்டாவிற்கு கீழ் தான் வாங்கும். அண்ணாமலை திருந்துவார் என நினைத்தோம். ஆனால் அவர் திருந்தவில்லை. அண்ணாமலையை இனி கடுமையாக விமர்சனம் செய்வோம்" என இன்று அதிரடியாகத் தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.


கரு.நாகராஜன் பதிலடி: ஜெயக்குமாரின் பேச்சு பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "ஜெயக்குமார் ரொம்ப பதற்றத்தில் பேசியுள்ளார். அவரது பேச்சு வேதனை அளிக்கிறது. சி.வி.சண்முகம் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். செல்லூர் ராஜூ ஒருபக்கம் காமெடி செய்கிறார். இப்படி இவர்கள் பேசுவதை எல்லாம் தலைமை கணக்கில் எடுக்காதா?

 

வரலாற்றில் நடந்த சம்பவத்தை அண்ணாமலை பேசியதைக் கூட, கூட்டணி தர்மத்திற்கு எதிராகப் பேசுவதாக விமர்சிப்பது தவறு. கூட்டணி தர்மம் என்பது இரட்டைப் பாதையாக இருக்க வேண்டும். நாங்கள் சொல்வதைத்தான் பேச வேண்டும் என்று கூறமுடியாது. பாஜக பலம் பெற்று விட்டது. நோட்டாவுடன் போட்டி என விமர்சித்ததெல்லாம் கடந்த காலம். "என் மண் என் மக்கள்" யாத்திரை முடியும்போது பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமானது என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்.


அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டோம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஜெயக்குமார் இருக்கும் ஏரியாவான சென்னை மாநகராட்சியில் 200 இடங்களில் போட்டியிட்டதில் 14 வார்டுகளில் பாஜக இரண்டாம் இடம் வந்தது. அதிமுக 3வது இடத்திற்குச் சென்றது. அதை ஜெயக்குமார் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையே வேறு. ஓட்டு போடாத 40% மக்கள் வரப் போகிறார்கள். பார்க்கத்தான் போகிறீர்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

 

Related Post