மதுரை: திமுகவில் இருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் தங்களை கட்சியில் சேர்க்க வேண்டுமென தலைமைக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். முக அழகிரியே இன்னும் கட்சியில் ரீ-என்ட்ரி கொடுக்காத நிலையில் அவரது ஆதரவாளர்கள் சேர்க்கப்படுவார்களா என்பது குறித்து தலைமை தான் முடிவெடுக்கும் என்கின்றனர் மதுரை மாவட்ட உடன்பிறப்புகள்..
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரிக்கும், இளைய மகனான ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உண்டு. சென்னையில் ஸ்டாலின் இருந்த நிலையில். மதுரையை கவனித்துக் கொள்ள அவரை அனுப்பி இருந்தார் கருணாநிதி.
ஒரு காலத்தில் திருச்சியை தாண்டினால் கன்னியாகுமரி வரை மு.க.அழகிரியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது திமுக. ஒரு கட்டத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த வைகோ கட்சியை விட்டு சென்ற போது தென்மாவட்டங்களில் திமுகவை பலமாக வைத்திருந்தவர் அழகிரி.
அதற்காக அவருக்கு தென் மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி மத்திய அமைச்சராகவும் இருந்தார். இந்த நிலையில் நாட்கள் செல்ல செல்ல ஸ்டாலின் - அழகிரி ஆதரவாளர்கள் என திமுகவில் கோஷ்டி முளைத்தது. ஒரு கட்டத்தில் அடுத்த திமுகவின் எதிர்காலம் ஸ்டாலின் தான் என உறுதியான நிலையில் அவர் பக்கம் இருந்த தளபதி, மூர்த்தி, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறினார்கள்.
ஆனால் எங்கள் அஞ்சாநெஞ்சன் என அப்போதைய துணை மேயரான மன்னன், மாநகர் மாவட்ட அவைத் தலைவரான இசக்கிமுத்து, கோபிநாதன், முபாரக் மந்திரி,கொட்டாம்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அழகிரிக்கு பின்னால் இருந்தனர். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டிலிருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து திமுகவிலிருந்து நீக்கப்பட்டனர் .அழகிரியின் குரல் திமுகவில் எடுபடாமல் போனது. தொடர்ந்து அழகிரி புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும், பாஜகவுடன் இணையப் போவதாகவும் வதந்திகள் உலாவின. ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
தொடர்ந்து அழகிரியின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். அழகிரியும் ஒரு கட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் மரணத்திற்கு பிறகு அழகிரி திமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அழகிரி இன்றுவரை திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 2021 தேர்தலில் ஸ்டாலின் மீது இருந்த கோபத்தால் திமுக தோற்கும், ஸ்டாலின் முதல்வராக முடியாது என ஆவேசமாக பேசினார்.
ஆனால், திமுக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதற்குப் பிறகு அழகியின் ஆதரவாளர்கள் மீண்டும் தங்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என கடிதம் கொடுத்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்படவில்லை. இடையே ஸ்டாலினுடன் இணக்கமான போக்கை கையாள தொடங்கினார் அழகிரி. தம்பி நல்ல ஆட்சியை தருவார் என கூறினார். மதுரைக்குச் சென்ற உதயநிதி பெரியப்பாவை சந்தித்து பேசினார்.
ஆனாலும் அழகிரி நினைத்தது போல் மீண்டும் திமுகவிற்குள் வர முடியவில்லை. இதற்கு இடையே அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மன்னன், இசக்கிமுத்து, முபாரக் மந்திரி, கோபிநாதன் ஆகியோர் தங்களை கட்சியில் சேர்க்க வேண்டுமென திமுக தலைமைக்கு மீண்டும் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.இது தொடர்பாக மதுரை உடன்பிறப்புகளுடன் பேசிய போது,” மன்னன் உள்ளிட்டோர் அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்தாலும், திமுக மீது கொள்கை பிடிப்பு கொண்டவர்கள். அவர்கள் அதனால் தான் வேறு கட்சிக்கு செல்லாமல் இருக்கிறார்கள்.
பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றால் அவர்களுக்கு நல்ல மரியாதையும் பதவியும் கிடைக்கும். ஆனால் அழகிரிக்காகவே இன்னும் எந்த கட்சியிலும் சேராமல் இருக்கிறார்கள். அப்போதைய சூழலில் திமுக தலைமைக்கு எதிராக அவர்கள் போஸ்டர் ஒட்டியதால் பல மாவட்ட நிர்வாகிகள் அவர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது. தற்போதைக்கு அவர்கள் கடிதம் கொடுத்திருந்தாலும் தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கின்றனர்.