இதை சொன்னால் பூமர் அங்கிளா? ’லக்கி பாஸ்கர்’ ராம்கி பிடித்த சரியான பாயிண்ட்!

post-img
சென்னை: இன்றைக்கு சினிமா உலகில் தலைதூக்கி இருக்கும் பான் இன்டியா கலாச்சாரம் தன்னை வியப்பில் ஆழ்த்தியிருப்பதாக நடிகர் ராம்கி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் தமிழ் உட்படப் பல மொழிகளில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் படம் நடிகர் ராம்கிக்கு மறு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அவரது ஆண்டனி கதாபாத்திரத்தைப் பலரும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். அவர் இதன் மூலம் சரியான ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் பல பான் இன்டியா அளவில் வெற்றி பெற்றுள்ளதால், இப்போது ஹிந்தி உட்படப் பல மொழிகளிலிருந்து இவருக்கு ஆஃபர் வருவதாகக் கூறியுள்ளார் ராம்கி. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அதிகம் நடித்து வந்த தனக்கு மலையாளம், ஹிந்தியிலிருந்து வாய்ப்பு வருவது ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ராம்கிக்கு 22 வயதில் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 80 படங்கள் மேலாக நடித்திருக்கிறார். அவரது குடும்பத்தில் பெரிய அளவுக்குப் படிக்காதவர் இவர்தான். ஆனால், திரைப்படக் கல்லூரியில் நடிப்புக்காக முறைப்படி படித்தவர். இவருடன் அங்கே படித்தவர் இயக்குநர் ஆபாவாணன். சிறுவயதில் அவரது அம்மா அசைவம் சாப்பிடக் கூடாது என்று சொன்னதற்காக இதுவரை ராம்கி அசைவம் சாப்பிட்டதே இல்லை என்பது ஆச்சரியமான விசயமாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், கடந்த 25 வருடங்கள் ராம்கிக்காக அசைவ உணவையே தொடாமல் வாழ்ந்தவர் அவரது மனைவி நிரோஷா. அவர் சில காலத்திற்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர்கள் உடல் வலிமைக்காக அசைவம் சாப்பிடச் சொல்லி அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். அதை ஏற்று மனைவியைச் சாப்பிட அனுமதித்திருக்கிறார் ராம்கி. அதை அவரே ஒரு பேட்டியில் இப்போது தெரிவித்திருந்தார். தனது குடும்பம் பற்றி ராம்கி அளித்துள்ள ஒரு பேட்டியில், "என் வீட்டில் அண்ணன் இன்ஜினியர். அக்கா டாக்டர். நல்ல படித்த குடும்பம். ஆனால், நான் படிக்கவில்லை. நல்லவேளை நான் சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டேன். திரும்பிப் பார்க்கக்கூட நேரம் இல்லாத அளவு பிசியாக இருந்துவிட்டேன். ஒருவேளை தவறி இருந்தால், என் வாழ்க்கையே அவ்வளவுதான். நான் படிக்காமல் வெற்றி பெற்றுவிட்டேன். அது லட்சத்தில் ஒருவருக்கு நடக்கலாம். படிக்காத 15 பேர் வெற்றி பெற்றிருக்கலாம். படித்து பல கோடி பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, படிப்பு முக்கியம். இதைச் சொல்வதால் நான் பூமர் அங்கிள் இல்லை" என்று கூறியுள்ளார். திரைப்படக் கல்லூரி தமிழ் சினிமாவுக்கு அளித்த இயக்குநர் ராபர்ட் ராஜ்குமார் இயக்கிய 'சின்னப் பூவே மெல்ல பேசு' படத்தின் மூலம் அறிமுகமானவர். விஜயகாந்த்துடன் இவர் சேர்ந்து நடித்த 'செந்தூரப்பூவே' மெகா ஹிட் மூவியாக அமைந்தது. அதில் நடிக்கும் போதுதான் அவர் நிரோஷாவுடன் காதல் வயப்பட்டார். அப்போது பத்திரிகை உலகில் இந்தக் காதல் ஜோடியின் செய்திகள் அதிகம் கிசுகிசுவாக வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதாகப் பல ஆண்டுகள் வரை சொல்லப்பட்டது. அதன்பின்னர் அருண்பாண்டியனுடன் இவர் சேர்ந்து நடித்த 'இணைந்த கைகள்' ஆக்‌ஷன் மூவி பெரிய புகழை இருவருக்கும் சம்பாதித்துக் கொடுத்தது. அதேபோல் 'மருது பாண்டி' திரைப்படம். ஆக்‌ஷன், ரொமான்ஸ் போன்ற கதாபாத்திரங்களில் நடித்த இவர் 'வனஜா கிரிஜா', 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' போன்ற காமெடி படங்களிலும் நடித்துப் பெயர் எடுத்தார். இவர் நடிக்க வந்த காலத்தில் ராம்கி என்றால் அழகான ஹீரோ. இளம் பெண்கள் விரும்பும் காதல் நாயகன் என்று பெயர் இருந்தது. சினி உலகம் சேனலுக்கு ராம்கி அளித்துள்ள பேட்டியில், "அந்தக் காலத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை டூப் போடாமல் நடிப்பேன். அருண்பாண்டியனும் அப்படித்தான். நான் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியவன். அந்தக் காலத்தில் அர்னால்ட் ஆஃப் தமிழ்நாடு அருண்பாண்டியன் தான். 'இணைந்த கைகள்' இடைவேளையில் வரும் எங்கள் காட்சி மாதிரியே இப்போது ஆர்.ஆர்.ஆர் படத்தில் கூட வைத்திருந்தார்கள். என்னுடன் திரைப்படக் கல்லூரியில் படித்து வெளிவந்தவர்கள் சினிமாவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்போது நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம். அதனால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என நினைக்க மாட்டேன். எந்த கேரக்டராக இருந்தாலும் அது சினிமா. அப்படித்தான் பார்ப்பேன்" என்கிறார்.

Related Post