மசூதி இடத்தில் இந்து கோயில் இருந்ததாக வழக்கு வந்தால் இனிமேல் கோர்ட் விசாரிக்க கூடாது- உச்சநீதிமன்றம்

post-img
டெல்லி: மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் தொடர்பாக புதிய சிவில் வழக்குகளை விசரணை நீதிமன்றம் விசாரிக்க கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கடந்த 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 க்கு முன்பு கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசை பதில் அளிக்க உத்தரவிட்டு, கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகு அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், மனு மீதன விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை சிறப்பு அமர்வில் இன்று நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த சிறப்பு அமர்வில், தலைமை நீதிபதி, சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதிகள் இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கோரும் வழக்குகளை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புதிய சிவில் வழக்குகளை நாட்டில் உள்ள எந்த ஒரு விசாரணை நீதிமன்றம் விசாரிக்க கூடாது எனவும் வழிபாட்டு சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமும் புதிய வழக்கை பதிவு செய்யக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமண்றம், மத்திய அரசு 4 வாரங்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Related Post