கோவையில் ஏசி பொருத்த வந்த வீட்டில்.. எக்குத்தப்பான வேலை.. கம்பி எண்ணும் மெக்கானிக்

post-img
கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் டேனியல் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு அவர் ஏசி மாட்ட விரும்பியுள்ளார்.. அதற்காக புதிய ஏசி ஒன்றையும் வாங்கியுள்ளார். வீட்டில் ஏசி மாட்டுவதற்காக டெக்னீசியனை அழைத்துள்ளார். அந்த டெக்னீசியன் ஏசி மாட்ட வந்த இடத்தில் பார்த்த எக்குத்தப்பான வேலையால் சிறையில் கம்பி எண்ணுகிறார். வாழ்க்கையில் குறுக்கு வழியில் ஈஸியாக சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் சம்பாதிக்க ஆசைப்படும் இளைஞர்கள், ஸ்மார்ட் ஒர்க் ஒன்று நினைத்து பணத்தை இழக்கிறார்கள்.. குறிப்பாக ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நம்பி பணத்தை போட்ட பல லட்சங்களை இழந்துவிடுகிறார்கள். அந்த கடனில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் எடுக்கும் முடிவுகள் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. அப்படித்தான் கோவை சசிக்குமார் எடுத்த முடிவு அவரை சிறையிலேயே தள்ளியுள்ளது.. என்ன செய்தார் என்பதை பார்ப்போம். கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் சாரதாம்பாள் நகரில் வசித்து வரும் பாபு டேனியல் என்பவர் அந்த பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டி உள்ளார். இவரது வீட்டிற்கு ஏ.சி. எந்திரத்தை பொருத்துவதற்காக மெக்கானிக் ஒருவர் வந்திருக்கிறார். அப்போது அந்த நபர் பொருட்கள் வாங்கி வருமாறு வீட்டு உரிமையாளரை கடைக்கு அனுப்பியிருக்கிறார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவின் கதவைத்திறந்து அதில் இருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை திருடியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் ஏ.சி.யை பொருத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதற்கிடையில் இரவில் பாபுடேனியல் மனைவி பீரோவை திறந்து பார்த்திருக்கிறார். அப்போது அங்கு வைத்திருந்த தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஏ.சி. பொருத்துவதற்காக வந்த மெக்கானிக் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 32) என்பதும் தங்க சங்கிலியை அவர் திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஏசி மெக்கானிக் சசிக்குமாரை கோவை சூலூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சசிக்குமாரிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானதால் தங்க சங்கிலியை திருடியதாக கூறினார். இதையடுத்து போலீசார் ஏசி மெக்கானிக் சசிக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Post