தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு காரில் ஒரு கும்பல் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காரை கண்காணித்து டெல்லி போலீசார் மூன்று வாகனங்களில் துரத்தினர். ஆனாலும் போலீஸ் பிடியில் சிக்காமல் அந்த கார் தப்பி சென்றது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டெல்லியில் சவுத் எக்ஷன்சன் பகுதியில் நள்ளிரவு 12.35 மணியளவில் சாம்பல் நிற ஹூண்டாய் ஐ 20 கார் சென்று கொண்டிருந்தது. காரில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அமர்ந்து இருந்தனர். அப்போது காரின் பின் இருக்கையில் இருந்ந்த பெண் ஒருவர் காப்பாற்றுங்கள் என உதவி கேட்டு அலறினார். ஆனால், கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்தக் காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி உடைந்தனர்.
உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து நடைபெற்ற சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண்ணுடன் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருப்பதை உறுதியானது. உடனடியாக அடுத்தடுத்த சிக்னல்களில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மின்னல் வேகத்தில் சென்ற அந்த காரை போலீஸ் வாகனங்களும் பின் தொடர்ந்து விரட்டின. ஆனாலும் நிற்காமல் அந்த கார் சென்றது. போலீசார் காரின் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அது ஒரு பைக்கின் எண் என்பது தெரியவந்தது. போலியான எண்களுடன் அந்த காரை பிடிக்க போலீஸார் எவ்வளவோ முயற்சித்தும் பிடிக்க முடியாமல் மின்னல் வேகத்தில் சென்றது.
எனினும் பாரபுல்லா மேம்பாலம் வழியாக அந்த கார் போலீசிடம் இருந்து நழுவி ஓடியது. நள்ளிரவில் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு சினிமா பாணியில் கார் தப்பிச்சென்றது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் நொய்டாவில் உள்ள காவல்துறையினருக்கும் காரைப்பற்றிய விவரங்களை கூறி அலார்ட் செய்தனர். எனினும் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
டெல்லியில் உள்ள விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தங்கியிருந்த பெண்கள் யராவது மாயம் ஆகியிருக்கிறார்களா? என்று போலிசர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது கடத்தல் சம்பவமாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே காரில் சென்ற நபர்கள் அறிமுகம் ஆனவர்களாக இருக்கலாம் எனவும் கூறினர். எனினும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.