புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்தபோது குழந்தை பெற்றெடுத்து ஒன்றரை மாதமே ஆன இளம் பெண் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டு நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில் 20 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த கருகமணியை வைத்து காவல்துறையினர் துப்புத் துலக்கி கொலையாளியை கைது செய்துள்ளனர்..
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புளியஞ்சோலையை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜகுபர் நிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு தான் ஜகுபர் நிஷாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தையும் பிறந்தது. கைக் குழந்தை இருப்பதால் அவர் கடைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜகுபர் நிஷாவின் வீட்டிலிருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதை அடுத்து அருகில் இருந்த மக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஜகுபர் நிஷா பல இடங்களில் உடலில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஜகுபர் நிஷா உயிர் இழந்தார்.
பச்சிளம் குழந்தை பசியால் துடித்துக் கொண்டிருக்க மனைவியை இழந்த மைசூர் ரகுமான் கதறி துடித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது. இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் மைசூர் ரகுமான் உள்ளிட்ட சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். இருந்த போதும் கொலையாளிகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கொலை நடந்த வீட்டின் பின்பகுதியில் முக்கிய தடயம் ஒன்று சிக்கியது.
இதற்கிடையே கொலை நடந்ததிலிருந்து போலீசார் விசாரணை நடத்தும் வரை அதே பகுதியைச் சேர்ந்த முகமது அபு உஸ்மான் என்பவர் நிஷா கொலை சம்பவத்திற்கு பிறகு அப்பகுதிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை அடுத்து இதனை கண்காணித்த உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது அபு உஸ்மானை விசாரணைக்காக அழைத்துச் சென்றதோடு அவரது செல்போனை சோதனை செய்தனர்.
அதில் ஜகுபர் நிஷாவின் வீட்டில் இருந்த சில தடயங்கள் முகமது அபு உஸ்மான் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபு உஸ்மானை போலீசார் கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்த போது ஜகுபர் நிஷாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொலை நடந்த அன்று மாலை ரகுபர் நிஷா வீட்டு பக்கமாக அபு சென்று இருக்கிறார்.
அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதைக் கண்ட முஹம்மது அபு உஸ்மான் வீட்டிற்குள் போய் அவர் அணிந்திருந்த கருகமணியை அறுத்து இருக்கிறார். இதனால் கருகமணி கீழே சிதறிய நிலையில் ஜகுபர் நிஷா கூச்சல் போட்டுள்ளார். இதனால் பயந்து போன முகமது அபு உஸ்மான் அவரது வாயை பொத்தி தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவர் மயக்கம் அடைந்ததும் முகமது தப்பியோடி உள்ளார்.
ஓடும் பதற்றத்தில் அவர் கைகளில் இருந்த கருகுமணி சிதறி உள்ளது. உடனடியாக வெளியூர் சென்றால் தன்னை கைது செய்து விடுவார்கள் என அச்சப்பட்ட முகமது அபு உஸ்மான் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அதே நேரத்தில் ஜகுபர் நிஷாவின் கணவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டதால் தன்னை பிடிக்க மாட்டார்கள் என கவலையில்லாமல் இருந்திருக்கிறார்.
ஆனால் அவசரத்தில் அவர் விட்டுச்சென்ற கருகுமணி தான் காட்டிக் கொடுத்தது என கூறுகின்றனர் போலீசார். இதற்கிடையே கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை ஆற்றுப்பாலத்தில் வைத்துள்ளதாக முகமது அபு உஸ்மான் கூறியதை அடுத்து அங்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தப்ப முயன்றதாகவும், இதை அடுத்து அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.