"தவெகவை விட்டு விலகுறேன்னு நான் சொல்லவே இல்லை” அடுத்த நாளே பேச்சை மாற்றிய பெண் நிர்வாகி! என்ன ஆச்சு?

post-img
அரியலூர்: நேற்று தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்த மகளிர் அணி நிர்வாகிகள், இன்று மீண்டும் தவெகவில் தான் இருப்பதாக கூறியுள்ளனர். “தவெகவை விட்டு விலகுறேன்னு நான் சொல்லவே இல்ல” என பேச்சை மாற்றியுள்ளார் தவெக பெண் நிர்வாகி பிரியதர்ஷினி ஜெயபால். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, மாநாட்டை நடத்தியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். மேலும் கட்சியை வலிமைப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் தவெகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக நிர்வாகிகள் இந்நிலையில், ஆங்காங்கே கட்சியில் நிர்வாகிகள் இடையே உட்கட்சி மோதல்கள் நடந்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில், தவெக கட்சியினர் அதிருப்தி காரணமாக மாற்றுக் கட்சிகளிலும் இணைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், அரியலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்தே விலகியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் கார்குடியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்த நிலையில், விஜய் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தார். அரியலூர் மாவட்ட தவெக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிற்கு தமது பகுதியில் இருந்து மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு‌ சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். கார்குடியில் தனது பகுதியில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வையும் ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார் பிரியதர்ஷினி. இந்நிலையில், கொடியேற்றும் நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதற்கு நியாயம் கேட்ட பிரியதர்ஷனி ஜெயபால் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகளை மதிக்காமல் விஜய் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. தவெக கொடியை இறக்கிய நிர்வாகிகள் இதனால் கடும் அதிருப்தி அடைந்த பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஏற்றப்பட்ட விஜய் கட்சியின் கொடியினை இறக்கினர். பின்னர் கட்சி துண்டு, காரில் கட்டிய கொடி ஆகியவற்றை அகற்றியதோடு, பேட்ச் அட்டைகளையும் அகற்றினர். இதற்கு தவெக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாங்கள் சொந்த செலவில்தான் கொடிக்கம்பம் அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம், எனவே நாங்கள் கொடியை இறக்குவோம் என வாக்குவாதம் செய்தனர். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் உண்டு என்று தலைவர் விஜய் கூறியதால்தான் கட்சியில் சேர்ந்தோம். மிகவும் பாடுபட்டு கட்சிப் பணிகளை செய்தோம். ஆனால் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை. எங்களது பணிகளை வெளியிலேயே தெரியவிடுவதில்லை. இந்தக் கட்சியில் இனிமேல் இருப்பதில் விருப்பவில்லை. கட்சியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம்” என்று தெரிவித்தனர். சமாதானம் இந்நிலையில், இன்று அரியலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள், அந்த பெண்ணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்துள்ளனர். பிரியதர்ஷினி கோபால் உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து, அவர் தவெகவில் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து விலகவில்லை இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரியதர்ஷினி கோபால், “நேற்று சில முரண்பாடுகளால் தவெக கொடியை இறக்கினோம். இன்று நாங்களே கொடியை ஏற்றி உள்ளோம். அரியலூர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் கொடியை ஏற்றி உள்ளோம். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம் எனக் கூறியுள்ள விஜய்யின் கொள்கையினால் மீண்டும் கொடி ஏற்றியுள்ளோம். நான் கட்சியை விட்டு வெளியே போவதாக சொல்லவில்லை. எனது விருப்பத்தோடு தான் கட்சிக்கு வந்தேன். இப்போதும் எனது விருப்பத்தோடு தான் தவெகவில் இணைகிறேன். தொடர்ந்து பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Post