அப்படி போடுங்க! மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசே அகற்ற பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

post-img
சென்னை: நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவுக்கு கொண்டு செல்லாவிட்டால் குப்பை மேலாண்மை நிறுவனத்திடம் கேரள அரசே ஒப்படைக்க வேண்டும் என ஆணையிடுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்கு காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாக கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாக கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருத்துவக் கழிவுகளில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாக நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தமிழக அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள், தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும், மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைக் கிடங்கா என கொந்தளித்து குரல் கொடுத்து வருகின்றனர். சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள மாநிலம் தொடர்பான வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, கேரள மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கேரளாவிலிருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கு உரிய செலவுத் தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். கேரள மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்? என்றும் கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசாங்கமே பொறுப்பேற்று அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும் அல்லது நெல்லை மாவட்டத்தில் இக்கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு இதை வழங்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Post