“நக்சல் என்பது புனிதமான வார்த்தை!” சீமான் கொடுத்த வித்தியாசமான விளக்கம்!

post-img
சென்னை: இந்தியாவில் 2026-ல் நக்சல்களே இருக்க மாட்டார்கள் என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், நக்சல் என்பது புனிதமான வார்த்தை என்று விமர்சித்துள்ளார். இது குறித்து சீமான் கூறியதாவது, “ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே போற்றுவது, மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பேசுவதைவிடவா கொடிய நக்சல் இந்த நாட்டில் இருந்துவிட முடியும். நக்சல் என்பது புனிதமான சொல். அதை நீங்கள் திரித்துக்கொள்ளாதீர்கள். விடுதலை 2 திரைப்படத்தில் நக்சல்கள் காட்டப்படுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். ஒரு போராளி சும்மா கத்துவானா? பசி, வலி ஆகியவைதான் கத்துவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த காரணத்தை புறம் தள்ளிவிட்டு, கத்துகிறவர்களை விமர்சிப்பது எப்படி நியாயமாகும்? நகர்ப்புற நக்சல், பிரிவினைவாதி, தீவிரவாதி, மாவோயிஸ்ட் என பலரை குற்றம்சாட்டுகிறீர்கள். இவர்களின் தோன்றியதற்கான காரணம் என்ன? இப்படியானவற்றை கற்பிப்பது அதிகாரம்தான். இரக்கமற்ற குணமும், அரக்க மனமும் கொண்டதுதான் அதிகாரம். அதிகாரத்திற்கு காதுகளே கிடையாது. அதிகாரம் அகண்ட வாயுடனும், கண்ணீர் இல்லாத கண்களுடனும், நீண்ட கால்களுடனும் இருக்கிறது. இந்த கால்களை கொண்டு அதிகாரம் மிதித்து நசுக்கும். வேலை வாய்ப்பு, உழைப்பு சுரண்டல், இயற்கை வளம் சுரண்டல், உரிமை பறிப்பு ஆகியவற்றிக்கு எதிராக நீங்கள் கேள்வி எழுப்பினால் உங்களை கால்களால் அழுத்தி நசுக்கும். இப்படியான ஒடுக்குமுறையை அகண்ட வாயை வைத்து பேசி நியாயப்படுத்தும். இதுதான் அரசு, இதுதான் அதிகாரம். இந்த அதிகாரம் விமர்சிக்கும் நக்சல் எனும் வார்த்தையைதான் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். அநீதியை எதிர்த்து போராடியதால்தான் இன்று விடுதலை கிடைத்தது. விடுதலைக்காக போராடிய பகத்சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் எல்லாம் நக்சல்களா? திரைப்படத்தை விமர்சிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் எதையாவது சொல்வார்கள். ஏனெனில் அவர்கள் கோட்பாடு இதில் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டிருந்தால் ஆகச்சிறந்த படம் என்று கூறியிருப்பார்கள். நக்சல் என்கிற விமர்சனம், அதிகாரம் செலுத்தும் கூட்டத்தினரின் மொழி. எனவே அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்” என்று கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த திரைப்படம் குறித்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இடதுசாரி தலைவர்கள் இந்த திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். திரைப்பட குழுவினரை சந்தித்து பாராட்டு தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நக்சல்கள் குறித்து பேசியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2026ம் ஆண்டுக்குள் இந்தியாவில் நக்சல்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post