அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலம்.. முதலிடத்தில் இருக்கும் ஆச்சரியம்.

post-img

டெல்லி: நமது நாட்டிலேயே அதிகபட்ச கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலைக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த மாநிலங்களில் எந்த இடங்களை பிடித்துள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

மத்திய கல்வி அமைச்சகம் உயர் கல்விக்கான அகில இந்திய கணக்கெடுப்பு குறித்த தகவல்களைச் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதன்படி பார்க்கும் போது நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் இருக்கிறது.

உபியை தொடர்ந்து நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உள்ளன.

தமிழகம் எங்கே: இந்த லிஸ்டில் 4ஆவது இடத்தில் ராஜஸ்தான் இருக்கிறது. தொடர்ந்து அடுத்து 5ஆவது இடத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த லிஸ்டில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. இந்த மாநிலங்கள் தான் நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களாக இருக்கிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு இந்த கணக்கெடுப்பை நடத்துகிறது. நாட்டில் உயர் கல்வியை வழங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக இது இருக்கிறது.. இந்த லிஸ்டில் 328 பல்கலைக்கழகங்களும் அதன் கீழ் 45,473 கல்லூரிகளும் வருகிறது.

எத்தனை கல்லூரிகள்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே அதிகபட்சமாக 8,375 கல்லூரிகள் உள்ளன. முந்தைய கல்வியாண்டில் அங்கு 8,114 கல்லூரிகள் இருந்த நிலையில், இப்போது சுமார் 200 கல்லூரிகள் அங்குப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து மகாராஷ்டிரா 4,692 கல்லூரிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், கர்நாடகா 4,430 கல்லூரிகளுடன் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் 3,934 கல்லூரிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

தமிழ்நாட்டு இந்த லிஸ்டில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2,829 கல்லூரிகள் உள்ளன. 2,702 கல்லூரிகளுடன் மத்தியப் பிரதேசம் ஆறாவது இடத்தில் இருக்கும் நிலையில், ஆந்திரப் பிரதேசம் 2,602 கல்லூரிகளுடன் ஏழாவது இடத்திலும், 2,395 கல்லூரிகளுடன் குஜராத் எட்டாவது இடத்திலும் உள்ளன. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ள தெலுங்கானா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முறையே 2,083 கல்லூரிகள் மற்றும் 1,514 கல்லூரிகள் உள்ளன.

 

 

சர்வே: இந்த சர்வேயில் மொத்த 42,825 கல்லூரிகளில் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், அதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான கல்லூரிகள் பொதுவான கல்லூரிகளாகும். 8.7 சதவீத கல்லூரிகள் டீச்சர் டிரைனிங் சார்ந்ததாக இருக்கிறது. 6.1 சதவீத கல்லூரிகள் பொறியியல் சார்ந்தவை. மேலும்,4.3 சதவீத கல்லூரிகள் நர்சிங் கல்லூரிகளாகவும் 3.5 சதவீத மருத்துவக் கல்லூரிகளாகவும் உள்ளன. மேலும், இதில் 14,197 கல்லூரிகள் முதுகலை படிப்புகளையும் வழங்குகின்றன.. 1,063 கல்லூரிகள் பிஎச்டி படிப்புகளை வழங்குவதாக அதில் கூறப்பட்டுள்ளன.

நகரங்களில் அமைந்துள்ள கல்லூரிகள் என்றால் பெங்களூரில் அதிகபட்சமாக 1,106 கல்லூரிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் 703 கல்லூரிகளும், ஹைதராபாத்தில் 491 கல்லூரிகளும் உள்ளன. தொடர்ந்து புனேவில் 475 கல்லூரிகள் இருக்கும் நிலையில், பிரயாக்ராஜில் 398 கல்லூரிகளும் ரங்கா ரெட்டி நகரில் 349 கல்லூரிகளும் உள்ளன. அதேபோல போபால் (344), காஜிபூர் (333), சிகார் (330) மற்றும் நாக்பூர் (326) ஆகியவை அதிக கல்லூரிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related Post