டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இப்போதுதானே பேசப்படுகிறது.. நீங்கள் ஏன் தலைப்பில் "மீண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல்" என எழுதியிருக்கிறீர்கள் என்ற கேள்வி எழ வேண்டும். அப்போதுதான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற இந்திய வரலாற்றின் தேர்தல் சரித்திரத்தின் புதிய அத்தியாயம் குறித்த புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளவும் முடியும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோவை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இன்று தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதாவை எப்படியும் நிறைவேற்றுவோம் என பாஜக அணியும் எப்படியும் முட்டுக்கட்டை போடுவோம் என எதிர்க்கட்சிகள் அணியும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் நிற்கின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது என்ன? இது கடந்து வந்த பாதை என்ன? எதிர்காலத்தில் என்ன சவால்களை இந்த திட்டம் எதிர்கொள்ள நேரிடும்?
இந்தியாவில் அமலில் இருந்த ஒரே நாடு ஒரே தேர்தல்
நாடு விடுதலை அடைந்த பின்னர் முதலாவது பொதுத் தேர்தல்- லோக்சபா தேர்தல் மற்றும் அன்றைய மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நேரத்தில்தான் நடைபெற்றது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையானது 1951-1952, 1957, 1962, 1967 என நாட்டின் முதல் 4 லோக்சபா தேர்தல்களில் நடைமுறையில் இருந்ததுதான்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது முடிவுக்கு வந்தது?
நாடு பல்வேறு மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் வலிமை பெறாத ஒன்றாக முடிவுக்கு வந்தது.
1971-ல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் என்ன நடந்தது?
1967-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதல்வரானார். 1969-ல் பேரறிஞர் அண்ணா மறைவைத் தொடர்ந்து கருணாநிதி முதல்வராக பதவியேற்றார். 1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தும் போது, தமிழ்நாடு சட்டசபைக்கு முன்கூட்டியே லோக்சபா தேர்தலுடன் இணைந்து சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை அளவில் இல்லாமல் போனாலும் 1971-ம் ஆண்டும் லோக்சபா தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?
ஆனாலும் 1983-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையமானது தமது ஆண்டு அறிக்கையில், நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுடன் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. இதேபோல 1999 -ம் ஆண்டு, 2018-ம் ஆண்டுகளில் சட்ட ஆணையமும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த பரிந்துரைத்தது. நாடாளுமன்றக் குழுவின் 79-வது அறிக்கை (2015): ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தது.
ஒரே நாடு ஒரே தேர்தலும் பாஜக
2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே ஒரே நாடு ஒரே தேர்தல் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக ஏற்றுக் கொள்வதாகவும் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அறிவித்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைகள் என்ன?
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்கான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த உயர்நிலைக் குழுவானது அரசியல் கட்சிகள், வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியது. இந்த உயர்நிலைக் குழு தமது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கியது.
ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மொத்தம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தலாம்; முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். இரண்டாம் கட்டமாக பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும் என்பதாகும். மேலும் அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்; அத்துடன் நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்க வேண்டும்; இதனை செயல்படுத்த ஒரு குழுவையும் அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது ராம்நாத் கோவிந்த் குழு. இந்த பரிந்துரைகளை கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும் ஏற்றுக் கொண்டது.