சென்னை: புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்கு அருகே உள்ள அர்த்த மண்டபத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை-2 படத்தில் இடம் பெற்றிருந்த வசனம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
மார்கழி மாதம் தொடங்கி இருக்கும் முன்னிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்கள் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சியும், நாட்டியஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜீயர்கள் கோவிலின் கருவறைக்கு அருகே பெருமாளை ஆண்டாள் தரிசித்ததாக கூறப்படும் அர்த்த மண்டபத்துக்கு சென்றனர்.
அப்போது அவர்களுடன் இளையராஜாவும் உள்ளே சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்க வேண்டும் என கூறினர். தொடர்ந்து வெளியே நின்ற இளையராஜா அங்கிருந்தபடி வழிபாடு செய்தார். இதை அடுத்து இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தீண்டாமையின் உச்சமாக இளையராஜாவை வெளியே நிற்க வைத்ததாக சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அர்த்த மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், இளையராஜாவை கட்டாயப்படுத்தவில்லை. ஜீயர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரே தான் வெளியே சென்றார் என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. இதை அடுத்து கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இளையராஜாவின் சம்பவத்தை தொடர்பு படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை பூ படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த வசனம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. ”என்ன மாதிரி படிக்காதவன் ஒருத்தன் தண்டவாளத்துல தல வச்சி படுத்ததனால தான்.. உன்ன மாதிரி ஒருத்த படிச்சிட்டு வந்து இங்க உக்காந்திருக்க..! திங்குற சோத்தையும்.. பேசுற மொழியையும் மாத்திட்டா.. உன்ன எங்க ஆளுகனு அவனுக ஏத்துக்குவாங்களாய்யா” என இளவரசு பேசும் வசனம் அப்போதே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இளையராஜா அவமதிக்கப்பட்டதை வைத்து அந்த வசனம் தற்போது மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை திரைப்படம் வெளியானது. இதில் சூரி கதை நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதியின் பின்னணி குறித்த கதை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கும் இளையராஜா தான் இசை அமைத்துள்ளார் என்பதும் , தற்போது அந்த காட்சிகளை வைத்து தான் விமர்சிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.