பெங்களூர் மக்களே.. காவிரி குடிநீர் இணைப்பு வேண்டுமா? உட்கார்ந்த இடத்திலேயே அப்ளை செய்து பெற சான்ஸ்

post-img
பெங்களூர்: பெங்களூரில் புதிதாக காவிரி குடிநீர் இணைப்பு பெறுவதற்கான ‛காவேரி இணைப்பு' பிரசாரத்தை பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 3 வாரங்களில் 110 கிராமங்களில் வீடு வீடாக நடத்தப்பட்ட பிரசாரத்தில் 9,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ், கூறியுள்ளார். பெங்களூரில் வசிக்கும் மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெங்களூரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீரை உறுதி செய்யும் பணியை பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் தொடங்கி உள்ளது. குறிப்பாக, பெங்களூரின் புற நகர் பகுதிகளில் புதிதாக காவிரி நீர் வழங்கல் திட்டத்தில் இணைக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் சென்று சேர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக ‛காவேரி இணைப்பு'( 'ಕಾವೇರಿ - ಸಂಪರ್ಕ ) என்ற பெயரில் புதிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து விண்ணப்பம் பெற்று வருகின்றனர். இதுபற்றி பெங்களூர் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் (தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்) கூறியதாவது: பெங்களூரில் காவிரி இணைப்பு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 3 வாரத்தில் 110 கிராமங்களில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. துணை முதல்வர் டிகே சிவக்குமார் வழிக்காட்டுதலின்பேரில், எளிமையான முறையில் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறுவது தான் இந்த பிரசாரத்தின் நோக்கமாகும். தற்போது வரை புதிய குடிநீர் இணைப்புகளை பெற 9 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கு மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காவிரி நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் எடுத்து கூறி பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்படியாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டு, "இருந்த இடத்திலேயே" குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. பெங்களூரில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனையை எதிர்கொண்ட 110 கிராமங்களில் இந்த பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் இணைப்பு வழங்கும் விவகாரம் தொடர்பாக சில புகார்கள் வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காவிரி நீரை பெறுவதற்கான குழாய் இணைப்புக்கு வீட்டில் இருந்தே மக்கள் விண்ணப்பம் செய்யலாம். குடிநீருக்கு அதிகளவில் பணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க தனியாக விஜிலென்ஸ் செல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் காவிரி நீருக்காக குழாய் இணைப்பை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் பொதுமக்கள் தாராளமாக பெங்களூர் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். இங்கு அளிக்கப்படும் புகார் மீது உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையில் தவறு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாரியத்தின் சட்டத்தின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Related Post