சென்னை: அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலையை எதிரியாக கருதி கூட்டணியை முறித்துள்ளனர், அண்ணாமலைக்காக எடப்பாடி இந்த பெரிய கூட்டணியை முறித்துள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த கூட்டணி முறிந்துள்ளது. அதிமுகவின் இந்த முடிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுகவின் இந்த முடிவு அவசரகமான முடிவு. அவமானகரத்தை தாங்கிக்கொண்டு கூட்டணியில் இருக்க முடியாது என்பதால் எடப்பாடி விலகி இருக்கிறார். மோடியை நம்பி அவர் கூட்டணியில் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. இதுதான் என்னுடைய கருத்து.
2014, 2019 லோக்சபா தேர்தலில் வெல்ல மோடிதான் காரணம், நேருவை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார். மோடி மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அப்படி இருக்க மோடி பெரிய தலைவர்தான். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர்தான். அவரும் தமிழ்நாட்டில் நல்ல வாக்கு வங்கி வைத்துள்ளார். ஆனால் நடப்பது சட்டசபை தேர்தல் அல்ல நாடாளுமன்ற தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி வெத்து வேட்டு செல்லாத ஓட்டு என்றுதான் சொல்வேன்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாக வெல்ல முடியாது. அவரின் இந்த முடிவு மிகவும் தவறானது. மோடி இல்லாமல் லோக்சபா தேர்தலில் அதிமுக என்ன பிரச்சாரம் செய்யும். மோடி பிரதமர் ஆவார் என்று இத்தனை காலம் சொன்ன அதிமுக இனி என்ன சொல்லும். அண்ணாமலையை எதிரியாக கருதி கூட்டணியை முறித்துள்ளனர். அண்ணாமலைக்காக எடப்பாடி கூட்டணியை முறித்துள்ளார். 5 சதவிகிதம் வாக்கு உள்ள அண்ணாமலையை எதிர்த்து உள்ளனர். அவரிடம் மல்லுக்கட்டி கூட்டணியை உடைத்துள்ளனர்.
அண்ணாமலையை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் அளவிற்கு எடப்பாடி இறங்கிவிட்டார் என்றுதானே கூறவேண்டும். அண்ணாமலை அளவிற்குத்தான் எடப்பாடி இருக்கிறார் என்றுதானே கூற வேண்டும். அண்ணாமலையிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறார்களே. இதுதான் எடப்பாடியின் ஆளுமையா? அண்ணாமலை நியமன தலைவர். அவரால் பயந்து கூட்டணியை முறித்துவிட்டனர்.
இதனால் அண்ணாமலையின் உயரம் கூடிவிட்டது என்றுதானே கூற வேண்டும். அண்ணாமலையை எதிரியாக வைத்து இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றால் அண்ணாமலையின் உயரம் அதிகரித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். திருச்சி மீட்டிங்கில் கூட முதல்வர் ஸ்டாலின் அண்ணாமலை பெயரை சொல்லி பேசினார். அப்படி என்றால் அண்ணாமலை வளர்ந்துவிட்டார் என்று தானே அர்த்தம்.
இந்த லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் vs எடப்பாடி என்ற நிலை வரும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் உண்மை நிலவரம் ஸ்டாலின் vs others தான். எடப்பாடிக்கு ஓபிஎஸ் இல்லாமல் 15 சதவிகித வாக்குகள் தான் உள்ளது. ஓபிஎஸ் இல்லாமல் அதை தாண்டி எடப்பாடி பழனிச்சாமி எடுக்க முடியாது. இப்படி இருக்க அவசரப்பட்டு எடப்பாடி பழனிசாமி கூட்டணியை உடைத்துவிட்டார்.
உண்மை அவரால் 10 எம்பி இடங்களை கூட வெல்ல முடியாது. 15 சதவிகித வாக்குகளை தாண்ட முடியாது. இதனால்தான் அவர் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும். அவருக்கு அப்போதுதான் ஆதரவு இருக்கும் என்று கூறினோம். ஆனால் அவர் அதை நம்பவில்லை. தனக்கு பெரிய பலம் இருக்கிறது என்று நினைக்கிறார்., என்று கூறியுள்ளார்.