சியாச்சின் பனிமலையில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் மருத்துவ அதிகாரி! குவியும் பாராட்ட

post-img

சியாச்சின்: உலகின் மிக உயரமான போர் பகுதியாக கருதப்படும் சியாச்சின் மலை பகுதியில், கேப்டன் ஃபாத்திமா வாசிம் எனும் வீராங்கனை முதல் பெண் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடல் மட்டத்திலிருந்து 15,632 அடி உயரத்தில் இமயமலையில் இந்த சியாச்சின் பகுதி அமைந்திருக்கிறது. பாகிஸ்தானும், சீனாவும் இந்த பகுதியை ஆக்கிரமிக்க துடித்து வருவதால் இந்திய ராணுவம் 24 மணி நேரமும் இந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பகுதியில் உயிர்வாழ்வதே மிகவும் சிரமமான விஷயமாகும். குளிர் மைனஸ் 6 முதல் 20 டிகிரி வரை செல்லும். எனவே உயிர் வாழவே பெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை இருக்கிறது. அப்படி இருக்கையில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்த பகுதியில் முதல் முறையாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் இந்த நியமனம் பெண் வீராங்கனைகளுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவதாக மற்றொரு பெண் அதிகாரி சியாச்சினில் பொறுப்பேற்றிருக்கிறார். கேப்டன் ஃபாத்திமா வாசிம் இவர் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சியாச்சினில் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்ற முதல் பெண் வீராங்கனை என்கிற பெருமையை இவர் பெற்றிருக்கிறார். இதனை இந்திய ராணுவம் தனது x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டு உறுதி செய்திருக்கிறது.
சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு உறைபனி பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது ஷூவுக்குள் பனி சென்றுவிட்டால், அல்லது ஷூ இல்லாமல் பனியை மிதிக்க நேர்ந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதனால் கை, கால்கள் உணர்வற்று போகும். குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அல்லது உயிர் போகும் நிலை கூட ஏற்படும்.
மறுபுறம் இது பனி காலம் என்பதால், ஊடுருவல் அடிக்கடி நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே உயிர்வாழ்தல் மற்றும் எதிரிகளை எதிர்கொள்ளுதல் என இரண்டு சவால்களை சியாச்சின் வீரர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இந்த அளவுக்கு சவால் நிறைந்த இடத்தில் பெண் வீராங்கனைகள் பணிக்கு அமர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். சியாச்சினில் மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஃபாத்திமா வசிமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Related Post