தற்போது விலகுகிறேன்.. விரைவில் இணைகிறேன்.. என்னாச்சு குஷ்புவுக்கு!

post-img

1980களில் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் குஷ்பு. அதன் பிறகு இவர் வருஷம் 16, சின்னத்தம்பி, மன்னன், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து தமிழ்நாட்டு மருமகளானார்.

இவர்களுக்கு இரு மகள்கள். குஷ்பு அவ்னி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பில் சன் டிவியில் நந்தினி உள்ளிட்ட சீரியல்கள் எடுக்கப்பட்டன. இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்துள்ளார். முதலில் திமுகவில் இணைந்த இவர் அங்கு ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருடைய தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறியிருந்தார். குஷ்பு சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்த நிலையில் பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸிலும் குஷ்புவுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அங்கு தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். அத்துடன் அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள், தனது மகள்களின் எதிர்காலம் உள்ளிட்டவை குறித்து கருத்து பதிவிட்டு வருவார்.

அது போல் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு கோபத்துடன் கொந்தளித்து பதில் கொடுப்பார். இந்த நிலையில் அவர் சமூகவலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நண்பர்களுக்கு வணக்கம்.

 

எனக்கு கொஞ்சம் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் உங்கள் ரேடாரில் இருந்து வெளியேறுகிறேன். விரைவில் இணைவேன். அதுவரை கவனமாக இருங்கள். நன்றாக இருங்கள். நேர்மறை எண்ணத்துடன் இருங்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட வலிக்காக இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார் குஷ்பு. இந்த நிலையில் தற்போது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் அவர் சிறிது காலம் சமூகவலைதளங்களில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Related Post