சென்னை: தங்கத்தின் மீது மக்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறார்கள். இந்தாண்டு மட்டும் தங்கம் விலை 30%க்கு மேல் அதிகரித்து இருப்பதே அதற்கு முக்கிய காரணமாகும். இதற்கிடையே அடுத்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்.. இந்தாண்டைப் போலவே தங்கம் லாபத்தை அள்ளி கொடுக்குமா என்பது குறித்த விவரங்களைச் சர்வதேச தங்க கவுன்சில் பகிர்ந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் பொதுமக்கள் எப்போதும் முதலீடு செய்யும் ஒன்று தங்கம்.. நீண்ட கால நோக்கில் தங்கம் விலை எப்போதும் குறையாது, பாதுகாப்பான முதலீடு என்பதால் பொதுமக்கள் தங்கத்தில் தான் ஆர்வமாக முதலீடு செய்கிறார்கள்.
தங்கம்: அதற்கேற்ப தங்கம் விலையும் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு தங்கம் விலை மிகப் பெரியளவில் உயர்ந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சென்னையில் ரூ. 5870க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை மளமளவென உயர்ந்தது. இடையில் பட்ஜெட் சமயத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. அப்போது மட்டும் தங்கம் விலை பெரியளவில் குறைந்தது. ஆனால், அதன் பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைப்பு, மத்திய கிழக்கு போர், ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இப்போது சென்னையில் 22 கேரட் தங்கம் ரூ. 7140க்கு விற்பனையாகி வருகிறது. இதற்கிடையே அடுத்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களைச் சர்வதேச தங்க கவுன்சில் பகிர்ந்துள்ளது.
30% விலையேற்றம்: இந்தாண்டு தங்கம் விலை 30% வரை அதிகரித்துள்ளது. ஆனால், அடுத்தாண்டு தங்கம் விலை இதே அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்தாண்டு தங்கத்திற்கு வாய்ப்புகளும் சவால்களும் ஒரே போல இருப்பதால் தங்கம் விலை மிதமான அளவே உயரும் என்று சர்வதேச கோல்ட் கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய வங்கி நடவடிக்கைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் நிலவும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால் அடுத்தாண்டு தங்கம் விலை உயர்வு என்பது இந்தாண்டைப் போல அபரிவிதமாக இருக்காது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன சூழல்: சர்வதேச நாடுகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது, புவிசார் அபாயம் உள்ளிட்டவை தங்கம் விலை உயரச் சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. அதேநேரம் மறுபுறம் மெதுவான வளர்ச்சி, மத்திய வங்கிகள் தங்கத்தைத் தொடர்ச்சியாக வாங்குவது ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு எதிரான ஒரு சூழலை ஏற்படுத்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு தங்கம் விலை அதிகரிக்கச் சீனா மத்திய வங்கி அதிகளவில் தங்கத்தை வாங்கியதும் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால், இப்போது சீனாவின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், அடுத்தாண்டு பொருளாதாரத்தை மீட்பதிலேயே சீனா கவனம் செலுத்தும். இதனால் இந்தாண்டைப் போலத் தங்கத்தை வாங்க வாய்ப்புகள் குறைவு. அடுத்தாண்டு தங்கம் விலை பெரியளவில் உயராமல் இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.
குறைவாகவே உயரும்: அதாவது தங்கம் விலை அடுத்தாண்டும் கூட உயரவே போகிறது. ஆனால், இந்தாண்டில் உயர்ந்த அளவுக்கு உயராது குறைந்த அளவே உயரும் என்றே சர்வதேச தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் ஒரு பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி அல்லது முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.