ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. இன்று லோக்சபாவில் தாக்கல்! புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

post-img
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க கூடியது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்கிறார். மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜக அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை பிரதமர் மோடி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தது. இதற்கிடையே, மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் அமல்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் நிலை குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த அறிக்கையை மத்திய கேபினட் கடந்த செப்டமர் மாதம் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய கேபினட் ஒப்புதல் கொடுத்தது. இந்த நிலையில் தான், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் 3 நாட்களே இருக்கும் சூழலில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க கூடியது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் குரலை ஒடுக்கும். இதை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான், லோக்சபாவில் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தாக்கல் செய்கிறார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பி வைப்பார் என கூறப்படுகிறது. மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பாஜக அனைத்து எம்.பி.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, எதிர்க்கட்சிகளும் தங்கள் கட்சி எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.

Related Post