ஃபெஞ்சல் புயல் சேதம்.. தமிழகத்திற்கு ரூ.6675 கோடி வேண்டும்! மத்திய குழுவிடம் முதல்வர் வலியுறுத்தல்!

post-img

சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினை கள ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய அரசின் குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, அந்த குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக 6675 கோடி ரூபாய் வழங்க பரிந்துரைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," தமிழ்நாட்டில் நவம்பர் 26 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிக கனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர். விழுப்புரம், கிருஷ்ணகிரி. தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது.

இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.12.2024 அன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என குறிப்பிட்டதோடு, பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாயினை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டதோடு, உடனடியாக ஒன்றிய பல்துறை குழுவினை அனுப்பி சேத விவரங்களை கணக்கிடவும் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து 3.12.2024 அன்று காலை பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, இந்த இயற்கை பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும், ஒன்றிய குழுவினை சேத மதிப்பீடுகள் மேற்கொள்ள விரைந்து அனுப்பி வைத்திடுமாறும் மீண்டும் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் துரித மீட்பு நடவடிக்கைகளினால் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீண்டு வருகின்றது.
தொடர்ந்து அதிகனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும்; முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்; பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும்; மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/- வழங்கிடவும், கால்நடை இழப்பிற்கும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டார். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ள ஒன்றிய குழுவின சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். ஒன்றிய குழுவிடம் ஃபெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு 6675 கோடி ரூபாய் வழங்கிட வேண்டி முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்தார். மேலும், ஒன்றிய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் ஆகியோர் ஒன்றிய குழுவிடம் ஃபெஞ்சல் புயல் சேத விவரங்கள் குறித்து விளக்கப் படக் காட்சி மூலம் விளக்கினார்கள். முக்கிய அரசுத் துறை செயலாளர்கள் உடன் கலந்து ஆலோசித்து ஒன்றியக் குழுவினர் மாவட்டங்களுக்கு கள ஆய்வு செல்வது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஒன்றிய குழுவினர் 7.12.2024 மற்றும் 8.12.2024 ஆகிய தேதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புயல் மற்றும் வெள்ள சேதத்தினை பார்வையிட உள்ளனர். கள ஆய்வினை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்கனவே தங்கி முன்னேற்றப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்." என கூறப்பட்டுள்ளது.

Related Post