திருவனந்தபுரம்: மூத்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) இரவு தனது 91 வயதில் காலமானார். எந்த அதிகார பீடத்தின் முன்பும் தலைவணங்காத எழுத்துக்காரன் என போற்றப்படுபவர் எம்.டி.வாசுதேவன் நாயர். தனக்கு நடந்த பாராட்டு விழாவிலேயே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எம்.டி.வாசுதேவன் நாயர் கண்டித்துப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் நெஞ்சு வலி காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.டி. வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு, எம்.டி வாசுதேவன் நாயர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று, அதாவது வியாழக்கிழமை மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மலையாள எழுத்துலகின் தலைமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் எம்.டி.வாசுதேவன் நாயர். மலையாள வாசகர்களால் அதிகமாக வாசிக்கப்படுபவரும் கூட. இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருது பெற்றவர் எம்.டி வாசுதேவன் நாயர். 54 படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள எம்.டி வாசுதேவ, 7 படங்களை இயக்கியும் உள்ளார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். வாசுதேவன் நாயரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள், வாசகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.டி.வாசுதேவன் நாயரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன், "மலையாள எழுத்தாளர் என்னும் ஆளுமையின் வெளிப்பாடு எம்.டி. வாசுதேவன் நாயர். எந்த அரசியல்வாதி முன்னரும், எந்த அதிகாரபீடம் முன்பிலும் அவர் ஒரு கணமும் வணங்கியதில்லை. அவர்கள் தன்னை வணங்கவேண்டும் என எண்ணுபவராகவே நீடித்தார். எம்டியின் 'ஆணவம்' புகழ்பெற்றது.
சென்ற ஆண்டு அவருடைய 90 ஆவது ஆண்டுவிழாவை கேரள அரசு ஒரு மாநில விழாவாகவே கொண்டாடியது. பள்ளிகள் தோறும் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. ஆனால் அந்த விழாவிலேயே முதல்வரின் ஆடம்பரத்தை வெளிப்படையாகக் கண்டிக்க அவர் தயங்கவில்லை. ஆனால் அதே எம்.டி மூத்த படைப்பாளிகள், கதகளி கலைஞர்களின் கால்தொட்டு வணங்கும் பணிவு கொண்டவராகவும் நீடித்தார். எழுத்தாளனுக்குரிய நிமிர்வு மட்டுமே கொண்டு ஒவ்வொரு கணமும் வாழ்ந்தவர், வெற்றிகளையும் சாதனைகளையும் மிக இயல்பாக நிகழ்த்தி முன்சென்றவர்." என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜெயமோகன் குறிப்பிட்டுள்ள அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கோழிக்கோட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்ற விழாவில் அவரை மேடையில் வைத்துக்கொண்டே பேசிய எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், அரசியல் இப்போது அதிகாரத்தை அடைவதற்கான பாலமாக உள்ளது. இங்குள்ள சில தலைவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளக்கூட தயங்குகிறார்கள், தனிமனித துதிபாடலை ரசிக்கிறார்கள், சர்வாதிகாரிகளாக இருக்கிறார்கள் என விமர்சித்தார்.
எம்.டி வாசுதேவன் நாயர் பேசி முடித்ததுமே, முதல்வர் பினராயி விஜயன் மேடையில் இருந்து எழுந்து சென்றார். எம்.டி.வாசுதேவன் நாயர், பினராயி விஜயனைத்தான் மறைமுகமாக விமர்சித்ததாக விவாதங்கள் எழுந்தன. இந்த சம்பவம் அப்போது கேரள தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. மார்க்சிஸ்ட் தலைவர்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என பதிலடி கொடுத்திருந்தனர்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.