ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பதான் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பூபேஷ் பாகல் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது பாஜக எம்பியும் மருமகனுமான விஜய் பாகலை தோற்கடித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 90 தொகுதிகளுக்கான தேர்தலில் ஆட்சியை பிடிக்க 46 இடங்களை பெற வேண்டியது அவசியமாகிறது.
இந்த தேர்தலில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மற்ற வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பதான் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பூபேஷ் பாகல் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அதாவது மருமகனும் துர்க் தொகுதி பாஜக எம்பியுமான விஜய் பாகல் 75,304 வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் பூபேஷ் பாகலோ 94,847 வாக்குகளை பெற்றுள்ளார்.
பதான் தொகுதியில் மும்முனை போட்டி நிகழ்கிறது. இங்கு காங்கிரஸ் கட்சி பூபேஷ் பாகலுடன் பாஜக வேட்பாளரும் பாகலின் மருமகனான விஜய் பாகல் போட்டியிட்டுள்ளார். அதோடு மாநில கட்சியான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (J) எனும் கட்சியின் தலைவர் அமித் ஜோகியும் போட்டியிட்டுள்ளார்.
விஜய் பாகல் துர்க் தொகுதியின் லோக்சபா எம்பியாக உள்ளார். முதல்வருக்கு தூரத்து உறவினர். மும்முனை போட்டி நிலவி வரும் இந்த பதான் தொகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பூபேஷ் பாகல் 84,352 வாக்குகளை பெற்று வென்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட மோதிலால் சாஹு 56,875 வாக்குகளை பெற்றார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் என்பது 27,477 வாக்குகள் ஆகும்.
சத்தீஸ்கரில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு பாஜக வெற்றி பெற்று வரும் நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ரமான் சிங் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் மக்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் காட்டியுள்ளனர். இதன் மூலம் பூபேஷ் பாகலின் வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளார்.