டெல்லி: எல்லைப் பகுதியில் எப்போதும் அதிக சர்ச்சையில் சிக்குவதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளது. இந்தமுறை பூட்டான் நாட்டில் சுமார் 22 கிராமங்களை உருவாக்கி தங்களின் மக்களை குடியமர்த்தியுள்ளது சீனா. இது பூட்டானின் மொத்த நிலப்பரப்பில் 2 சதவீதம். இது இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் சீனா பெய்ஜிங்கில், இந்தியா - சீனா எல்லை பிரச்னை தொடர்பான சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதே நாளில் தான் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பூட்டான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் சீனா சுமார் 22 கிராமங்களை புதிதாக உருவாக்கியுள்ளது. இதில் 8 கிராமங்கள் இமயமலையில் உள்ள 'டோக்லாம்' பீடபூமியில் அமைத்துள்ளனர்.
சத்தமே இல்லாமல் பூட்டானுக்குள் புகுந்து சீனா 22 கிராமங்களை உருவாக்கியுள்ள தகவல் சேட்டிலேட் படங்கள் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமங்களில் ஏராளமான கட்டிங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் பூட்டான் மேற்கு டோக்லாம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 8 கிராமங்களில் சீனா தங்களின் ராணுவ படைகளை இறக்கி முழுக்க முழுக்க தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் தகவல்படி, சீனா ஆக்கிரமித்துள்ள 22 கிராமங்களில் 'ஜிவு' என்ற பகுதி தான் பரப்பளவில் மிகவும் பெரியது. அது பூட்டான் மக்களால் பாரம்பர்யமாக மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் நிலப்பகுதி. அந்த நிலத்திலும் சீனா ஏராளமான கட்டிடங்களை எழுப்பியுள்ளனர். இது பூட்டானுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
பூட்டானில் சீனா தங்களின் ஆக்கிரமிப்பை வலுப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்கு அருகிலேயே 'சிலிகுரி' எனப்படும் முக்கிய பாதை உள்ளது. இதுதான் இந்தியாவை நம் வடமாநிலங்களுடன் இணைக்கும் மிக குறுகலான பாதையாகும். டோக்லாம் மீது நீண்ட காலமாகவே சீனா தனி கவனம் செலுத்தி வருகிறது.
இதேபோல கடந்த 2017 ஆம் ஆண்டிலும் சீனா டோக்லாமில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. இந்திய ராணுவம் களமிறங்கி அந்தப் பணிகளை தடுத்தது. அப்போது இந்தியா - சீனா இடையே சுமார் 73 நாட்களுக்கு தொடர்ந்து மோதல் நிலவியது. நீண்ட மோதலுக்கு பிறகே இருநாட்டு படைகளும் பின்வாங்கினர். தற்போது இதே இடத்தில் சீனா மீண்டும் கட்டுமானப் பணிகளை தொடங்கியது.
2016 ஆம் ஆண்டு பூட்டானில் முதல்முறையாக ஒரு கிராமத்தை ஆக்கிரமித்து 2,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி, அதில் 7,000 மக்களை குடியமர்த்தியதாக புகார் எழுந்தது. இப்படி பூட்டானின் சுமார் 825 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பூட்டானின் மொத்த பரப்பளவில் 2 சதவீதம் ஆகும்.
சீனா சத்தமே இல்லாமல் அங்கு அதிகாரிகள், காவல்துறை, ராணுவம், கட்டுமானப் பணியாளர்கள் அனைவரையும் அனுப்பியுள்ளது. சீனாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இதை இணைக்கும் வகையில் போக்குவரத்துக்கும் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சீனா அங்கு 7 புதிய கிராமங்களை உருவாக்கியிருப்பதாக புகார் உள்ளது.
இருப்பினும் சீனா இங்கு ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று பூட்டான் அரசும் மறுப்பு தெரிவித்தது. இந்தப் பிரச்னை குறித்து இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடவில்லை.