கிரீன்லாந்தை வாங்க போறாராம்.. அடுத்த சர்ச்சையை பற்ற வைத்த டிரம்ப்! திரைமறைவில் உள்ள சர்வதேச அரசியல்

post-img
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் தொடர்ச்சியாகத் தடாலடி கருத்துகளைக் கூறி வருகிறார். ஏற்கனவே பனாமா கால்வாய் குறித்து சில சர்ச்சை கருத்துகளை அவர் கூறியிருந்த நிலையில், இப்போது கிரீன்லாந்து குறித்தும் பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது கிரீன்லாந்தை அமெரிக்கா மொத்தமாக வாங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கிறார். இப்போது அவர் தனது நிர்வாகத்தில் இடம் பெறக்கூடியவர்களைத் தேர்வு செய்து வருகிறார். அதன்படி ஸ்வீடனுக்கான முன்னாள் தூதராக இருந்த கென் ஹோவரியை டென்மார்க் நாட்டிற்கான அமெரிக்கத் தூதராக டிரம்ப் தேர்வு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அவர் டென்மார்க் நாட்டிற்கு ஒரு பகுதியாக இருக்க க்ரீன்லாந்து குறித்தும் சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். கிரீன்லாந்து என்பது டென்மார்க் நாட்டின் கீழ் இருக்கும் ஒரு பகுதியாகும். பகுதியளவு சுயாட்சி உரிமைகளைக் கொண்ட பகுதியாக கிரீன்லாந்து இருக்கிறது. அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மிகப் பெரிய தளம் ஒன்றும் கிரீன்லாந்தில் இருக்கிறது. தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு க்ரீன்லாந்து நாட்டை அமெரிக்கா வாங்க வேண்டும் என்று டிரம்ப் கூறியது பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு, கிரீன்லாந்தின் உரிமை மற்றும் கட்டுப்பாடு முழுமையாகத் தேவை என்பதை அமெரிக்கா உணர்கிறது" என்று பதிவிட்டு இருந்தார். அதாவது டென்மார்க்கினஅ ஒரு பகுதியாக இருக்கும் க்ரீன்லாந்து, அமெரிக்கா வசம் வர வேண்டும் என்பதே அவரது கருத்தாகும். இதற்கு டென்மார்க் நாட்டின் பிரதமரோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரம் கிரீன்லாந்து நாட்டின் பிரதமர் மூட் எகெடே, இந்த பேச்சுக்கே இடமில்லை என்று டிரம்ப் கருத்தை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ""கிரீன்லாந்து எங்களுடையது. இது ஒன்றும் விற்பனைக்கு இல்லை.. ஒருபோதும் விற்க மாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக்கூடாது" என்று தீவின் பதிவிட்டுள்ளார். கிரீன்லாந்து நாட்டின் தலைநகரான நூக் தீவு என்பது அமெரிக்காவுக்கு மிக அருகே இருக்கிறது. அது கனிம, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்து இருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. இவ்வளவு வளங்கள் இருந்தாலும் கிரீன்லாந்தின் வளர்ச்சி மெதுவாகவே இருக்கிறது. மீன்பிடித்தல் மற்றும் டென்மார்க்கிடம் இருந்து பெறப்படும் மானியங்களே கிரீன்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கிரீன்லாந்து நாட்டில் உள்ள பிடுஃபிக் (Pituffik) என்ற பகுதியில் அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான மிகப் பெரிய தளம் ஒன்று இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கிறது. மேலும், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மிக எளிதாக இணைக்கும் ரூட்டாக இது இருக்கிறது. அதேநேரம் கிரீன்லாந்தை டிரம்ப் வாங்க முயல்வது இது முதல்முறை இல்லை. அவர் இதற்கு முன்பு அதிபராக இருந்த போதே 2019இல் கிரீன்லாந்தை வாங்குவதில் டிரம்ப் ஆர்வம் காட்டினார். இருப்பினும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகம் இதைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 56 ஆயிரம் தான். டென்மார்க்கில் இருந்து முழுமையாகச் சுதந்திரம் பெறும் உரிமையைக் கடந்த 2009ம் ஆண்டே கிரீன்லாந்து பெற்றுவிட்டது. இருப்பினும் கிரீன்லாந்து பொருளாதார ரீதியாக டென்மார்க்கையே பெருமளவு நம்பி இருக்கிறது. இதன் காரணமாகவே இதுவரை சுதந்திர நாடாகத் தன்னை க்ரீன்லாந்து அறிவித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post