கன்னியாகுமரி: அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தாமரைப்பதியில் அய்யாவழி ஆய்வு மையத்திற்கு தமிழக ஆளுநர் ரவி இன்று அடிக்கல் நாட்டினார்.
கன்னியாகுமரி தெற்கு தாமரைக்குளத்தில் உள்ள தாமரைக்குளம் அய்யா வைகுண்டசுவாமி பதி கோவிலில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பங்கேற்றார் தமிழக ஆளுநர் ரவி. அய்யாவழி ஆய்வு மையத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான். அதுதான் சனாதன தர்மம்.
ஆங்கிலேயர்கள் கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பார்லிமென்டில் இந்துக்கள் பற்றியும் இந்து தர்மம் குறித்தும் கண்டித்துப் பேசினர்.
முன்பு ஜாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு பலர் கோவிலில் கூட நுழைய முடியாமல் இருந்தனர். கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி" எனப் பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சனாதன தர்மத்தை போற்றிப் பேசி வருகிறார். சனாதனம் தான் நாம் பின்பற்ற வேண்டிய கலாச்சாரம் என தொடர்ந்து, தான் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறார் ஆளுநர். ஆளுநர் ரவியின் சனாதனம் தொடர்பான பேச்சுகள் அவ்வப்போது கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.