கோவை: தமிழ்நாடு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில் இந்த கூட்டணியில் இடம் பெற்ற சிறிய கட்சிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதிமுக அணியில் இடம்பெறுவதா? பாஜக தலைமையிலான கூட்டணியில் இருப்பதா? என்கிற குழப்பத்தில் சிக்கி இருக்கின்றன இந்த கட்சிகள்.
டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்பார்ப்பு: அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என புரட்சி பாரதம் கட்சி அறிவித்துள்ளது. அதேநேரத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்னமும் அதிமுக- பாஜக கூட்டணி முறியாது; இது தற்காலிகமான பிரச்சனை. இது சரி செய்யப்பட்டுவிடும் என நம்பிக்கையோடு இருக்கிறார்.
காத்திருப்போம்.. : சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக அரசுக்கு எதிராக இருக்கக் கூடிய வாக்குகளை ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலில் கணிசமான வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக அதிமுக- பாஜக கூட்டணி குறித்த கருத்துகளை தெரிவித்து வருகிறேன். இன்றைய அரசியலில் வாக்களிக்கும் மக்கள் கூட்டணியையும் கணக்கில் கொள்வார்கள். இதற்கு ஒரு வாய்ப்பு தந்துவிடக் கூடாது. கொஞ்சம் காத்திருந்தால் எதிர்பார்க்கிற நல்ல செய்திகள் வரலாம்.. வராமலும் போகலாம். இது இப்போதைக்கு முடிந்துவிட்டதாக பார்க்க வேண்டாம் என கூறியிருந்தார்.
கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்? பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!
டாக்டர் கிருஷ்ணசாமி சந்திப்பு: இதனைத் தொடர்ந்து இன்று கோவை சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, "இன்று கோவையில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல்கள் பற்றி கலந்துரையாடினோம்" என தெரிவித்துள்ளார்.
கோவையில் நிர்மலா சீதாராமன்: தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த நிலையில் கோவைக்கு வருகை தந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். டெல்லியில் நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். அதிமுக கூட்டணியை முறித்து கொண்டது தொடர்பாக அண்ணாமலையிடம் நிர்மலா சீதாராமன் விசாரித்ததாக கூறப்பட்ட நிலையில் கோவைக்கு நேற்று இரவு வருகை தந்தார் நிர்மலா சீதாராமன். இன்று கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Weather Data Source: Wettervorhersage 21 tage