சென்னை: கோட் என்றால் என்ன ஆடு.. இந்த ஆட்டுக்கும் அந்த ஆட்டுக்கும் ஒரு கூட்டு இருக்கிறது என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ லியோனி விஜய்யையும், அண்ணாமலையையும் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும் புதிததாக நடிகர் ஒருவர் தொடங்கியிருக்கும் கட்சியினை தூள் தூளாக ஆக்கப்போகிற கட்சி திமுக தான் என்றும் அவர் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், திமுக தான் அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிவிட்டார். மேலும் அவ்வப்போது திமுகவை விமர்சித்தும் பேசி வருகிறார். அதற்கு திமுகவினரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யையும், பாஜக அண்ணாமலையையும் திண்டுக்கல் லியோனி விமர்சித்து பேசினார்.
திண்டுக்கல் லியோனி பேசியதாவது:- கோட் என்றால் என்ன ஆடு.. இந்த ஆட்டுக்கும் அந்த ஆட்டுக்கும் ஒரு கூட்டு இருக்கிறது. இது அவரது கடைசி படத்திலேயே தெரிஞ்சுபோச்சு. அவருடைய கடைசி படம் என்னது ஆடு தான். அந்த ஆடும் இந்த ஆடும் ஒன்று தான் என்பது நேற்று முடிவாகி போச்சு. பாஜகவின் கைத்தறியாக திராவிட மாடலை கை நீட்டி பேசுவதற்கு வந்திருக்கக்கூடிய அந்த நடிகர் தொடங்கியிருக்கிற கட்சியை தூள் தூளாக ஆக்கப்போகின்ற கட்சி திமுக தான்.
அவர் என்னவென்றால், ஏகப்பட்ட தலைவர்களின் போட்டாக்களை எல்லாம் போட்டுவிட்டு, ஆஹா.. ஓஹா என்று எல்லாம் பேசிவிட்டு. 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூட்டணி இறுமாப்புடன் பேசுகிறீர்களே.. உங்களுடைய கூட்டணி கணக்கு மனைசில் போகும் என்று சொல்கிறார். நான் இன்று சொல்கிறேன், இதே மாதிரி நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். கடைசியில் திமுகவை எதிர்த்து பேசியவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார் விஜய். கூட்டணி கணக்குகளை வைத்துக்கொண்டு இறுமாப்புடன் 200-வெல்வோம் என நினைப்பவர்களை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று சாடினார்.
விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த வகையில் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய லியோனி கூறுகையில்,
"நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகளில் முதல்வராவேன் என சொல்கிறார்கள். நெஞ்சில் குடியிருக்கும் என பேசுகிறார்கள். குடியிருப்பவன் எப்பவேனாலும் காலி செய்துவிடுவார்கள். பணம் கொடுத்தால் ஓடிவிடுவார்கள். அவர் தொடங்கும் வார்த்தையிலேயே தப்பு இருக்கிறது" என்று சரமாரியாக விமர்சித்து பேசியிருந்தார்.