டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு! மத்திய அமைச்சருக்கு போனை போட்ட அண்ணாமலை! ஆறுதலாக வந்த அறிவிப்பு!

post-img

சென்னை: மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் டங்சன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இன்று முதல் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளது. அதில் சுரங்கதிற்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் தக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக, மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்களுக்குக் கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார். மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி." என கூறியுள்ளார்.

Related Post