கியரை மாற்றும் சிவகங்கை சீமை.. 36,500 பேருக்கு வேலை! கிரீன் சிக்னல் மட்டும்தான் பாக்கி

post-img
சிவகங்கை: மாவட்டங்கள் தோறும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைய உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு தற்போது சுற்றுசூழல் அனுமதி கோரியிருக்கிறது. தொழிற்பேட்டை அமைந்தால் அதன் மூலம் சுமார் 36,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, கொங்கு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியே இருக்கின்றன. இந்த நிலைமைய மாற்ற தமிழக அரசு மாவட்டம்தோறும் தொழிற்பேட்டைகள் உருவாக்கி வருகிறது. சிவகங்கை மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் முன்னேற அங்கு சிப்காட் அமைக்கப்படும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு பத்துடன் பதினொன்றாக அப்படியே அறிவிப்பாக நின்றுவிட்டது. தொழிற்பேட்டை அமைய தீவிரமாக எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தன. இதனையடுத்து மெல்ல மெல்ல நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. திட்டத்தின்படி மொத்தம் 1,451 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இலுப்பைக்குடி வருவாய் கிராமத்தில் 605.39 ஏக்கர், கிளாதரி வருவாய் கிராமத்தில் 62 ஏக்கர், அரசனூர் வருவாய் கிராமத்தில் 108.40 ஏக்கர் என வெறும் 775.79 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்து. இது திட்டமிட்டத்தில் சரியாபாதியான அளவாகும். இப்படி கையகப்படுத்தப்பட்ட நிலம், சிப்காட் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இப்பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்தது. ஆனால் சிப்காட் நிர்வாகம், தொழிற்பேட்டையை அமைக்க 2 ஆண்டுகளில் சீறிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று உள்ளூர் மக்கள் விமர்சித்து வந்தனர். அதே நேரம் 2021ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில், அரசனூர் சிப்காட் தொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இதற்காக ரூ.342 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் சுற்றுசூழல் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் அமைய இருக்கின்றன. இதன் மூலம் இம்மாவட்ட மக்கள் சுமார் 36,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தற்போது தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை சிவகங்கை மக்கள் வரவேற்றிருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதியில் ஏற்கெனவே ஒரு சிப்காட் தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்த வேண்டும் என்பதும் இம்மாவட்ட மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் மானாமதுரை சிப்காட் தொழிலாளர்களின் கோரிக்கைகள் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்த சிப்காட்டில் தோல் அல்லாத காலணி தயாரிப்பு தொழிற்சாலையை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே இது குறித்தும் சிவங்கை மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பழைய மானாமதுரை சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய சிப்காட்டும் அமைக்கப்பட்டால் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக வெளியூருக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post