26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக லோக்சபாவில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான நோட்டீஸை லோக்சபா காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் இன்று வழங்கினார்.
மணிப்பூர் மாநிலத்தில் 3 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதலை மத்திய அரசு தடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த மோதல் மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.
குக்கி இனமக்களுடன் மிசோரம் மாநிலத்தின் மிசோ மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். அதனால் குக்கி இனத்தவரை தாக்குகிற மைத்தேயி மக்கள், மிசோரம் மாநிலத்தை விட்டு வெளியேற ஆயுத குழுவினர் கெடு விதித்தனர். இதனையடுத்து மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் அஸ்ஸாமுக்கு இடம் பெயர்ந்தனர். இதற்கு பதிலடியாக அஸ்ஸாம் மாநிலத்தைவிட்டு மிசோ மக்கள் வெளியேற மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றன. இதனால் நாடாளுமன்றம் கடந்த 4 நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார் என்கிறார். இதனிடயே பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக, லோக்சபாவில் இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன
. 26 எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பாக இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இது தொடர்பாக நேற்று 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பிரதமர் மோடியை மணிப்பூர் குறித்து பேசவைக்க முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை.
இதனையடுத்து இன்று லோக்சபா செயலகத்தில் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் கவுரவ் கோகோய், நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் வழங்கினார். 50 எம்.பிக்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தால் விவாதத்துக்கு பட்டியலிடப்படும். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாத தேதியை லோக்சபா அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிவு செய்யும்.