ஈரோடு: ஈரோடு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் சிக்கியதில் கை துண்டாகி சம்பவ இடத்திலேயே முதியவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இஸ்திரி வேலை செய்து வரும் முதியவர் துணிகளை வாங்க சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் மாருதிநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 69). இவர் அப்பகுதியில் துணிகளுக்கு இஸ்திரி போடும் வேலை செய்து வருகிறார். சுப்பிரமணி தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் துணிகள் வாங்கி இஸ்திரி போட்டு கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக வீடுகளுக்கே சென்று துணிகளை வாங்கி வந்து பின்னர் இஸ்திரி செய்து சுப்பிரமணி கொடுத்து வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சனிக்கிழமை காலையில் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வழக்கம் போல இஸ்திரி போடுவதற்காக துணிகளை வாங்க சென்றுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 4-வது தளத்தில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு துணி வாங்குவதற்காக சுப்பிரம்ணி சென்றுள்ளார். அப்போது லிப்டில் ஏறி செல்ல முயன்றுள்ளார்.
சுப்பிரமணி லிப்டில் ஏற முயன்ற போது இரண்டாவது தளத்தில் இருந்து ஒருவர் லிப்டை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், லிப்ட் கீழே வந்துள்ளது. அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் சுப்பிரமணியின் கை லிப்டில் சிக்கி துண்டானது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இதையடுத்து குடியிருப்பு வாசிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஈரோடு போலீசார் சுப்பிரமணியன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். லிப்டில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Weather Data Source: Wettervorhersage 21 tage