டங்ஸ்டன் சுரங்கம்..ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் துரைமுருகன் சொன்ன விளக்கம்

post-img
சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் மத்திய சுரங்க அமைச்சகம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்துள்ளார் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமத்துறை அமைச்சரான துரைமுருகன். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் 2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது முதல் தமிழகம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக 2023 டிசம்பர் 6ஆம் தேதியில் தமிழக அரசின் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2024 நவம்பர் 7ஆம் தேதி ஏல முடிவை அறிவிக்கும் வரை தமிழகத்திடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை என மத்திய அரசு நேற்று கூறியிருந்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த விளக்கம், திமுக அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுரங்க அமைச்சகம் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சுரங்க அமைச்சகத்தின் ஏலம் எவ்வாறு அடிப்படைக் குறைபாடுடையது என்பதையும், ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வழிவகுக்கும், அதை மாநில அரசு மட்டுமே கையாள வேண்டும் என்பதையும், 03.10.2023 அன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளோம். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் கடிதத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக், அரிட்டாப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாக சுரங்கத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததே தவிர நில விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் கனிமத் தொகுதியில் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளம் இருப்பதை நன்கு அறிந்த சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இறங்கியுள்ளது. ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும். சுரங்க குத்தகையை தான் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது. எனவே சுரங்க அமைச்சகத்துடன் பயனற்ற தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு பதிலாக அதன் உரிமையை ஒதுக்கி வைத்துள்ளது. தற்போது சுரங்க அமைச்சகமும் ஏலம் விட முடியும் என்றாலும், சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பது எளிமையான விஷயம். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டிய நிலையில், மாநில அரசுக்கு மட்டுமே வருவாய் சேரும் போது, மாநில அரசின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தில் இறங்கியது. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமரிடம் இந்தப் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, சுரங்கத்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கனிம ஏலம் வழங்குவதை மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post