224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் ஆம்ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்திவு, மாலை 6 மணி வரை நீடிக்கும். 5 கோடியே 21 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட் உள்ளனர்.
கர்நாடகாவில் 1985- ஆம் ஆண்டு முதல் எந்த கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்ததில்லை. இந்த 40 ஆண்டு கால நடைமுறையை முறியடிக்க பாஜக கடுமையான வியூகங்களை வகுத்து வருகிறது. தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு அவர் 2008, 2013 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார்.வருணாவில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா களம் காண்கிறார். 2008 மற்றும் 2013- ஆம் ஆண்டுகளில் சித்தராமையா இத்தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிட்டு வென்றார்
பெங்களூரு புறநகர் பகுதிக்கு உட்பட்ட கனகபுராவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2008 - ஆம் ஆண்டு முதல் வெற்றி வாகை சூடி வரும் சிவக்குமார், கடந்த தேர்தலில் ஜனதா தள வேட்பாளர் நாராயண கவுடாவை விட 79,909 வாக்குகள் கூடுதலாக பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். டி.கே. சிவக்குமாருக்கு எதிராக வருவாய்த் துறை அமைச்சர் ஆர். அசோக போட்டியிடுவதால் கனகபுரா தொகுதி கவனம் பெற்றுள்ளது.
இரண்டு முறை முதலமைச்சராக இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி சன்னபட்னாவில் போட்டியிடுகிறார். இங்கு பாஜகவின் சி.பி. யோகேஷ்வர் மற்றும் காங்கிரசின் எஸ். கங்காதரர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் பாஜகவின் சி.பி. யோகேஷ்வரை 21,530 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தோற்கடித்தார். ஷிகாரிபுராவில் பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் BY விஜயேந்திரர் போட்டியிடுகிறார். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் ஷிகாரிபுராவில், 1983 முதல் இருமுறை மட்டுமே பாஜக தோல்வியடைந்துள்ளது.