திருநெல்வேலி சாந்தி நகரில் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இன்று காலையில் வழக்கம்போல் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பணிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அதேபோல் வழக்கு தொடர்பாக பொதுமக்களும் நீதிமன்றத்துக்காக வந்து கொண்டிருந்தனர். பொதுவாக திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு வருவோரை போலீசார் சோதனை செய்த பிறகு தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
இந்நிலையில் தான் இன்று காலையில் திருநெல்வேலி நீதிமன்ற வாசல் அருகே இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் சுற்றி வளைத்தது. அந்த இளைஞர் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய நிலையில் விரட்டிய கும்பல் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி கொன்றது. அதன்பிறகு 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பினர்.
இதுபற்றி அறிந்தவுடன் பாளையங்கோட்டை போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கொலையான நபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், அவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கொலையான மாயாண்டியின் பின்னணி பற்றி போலீசார் விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் ஜாதி ரீதியாக நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்க அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது
திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். இவர் திமுகவில் செயல்பட்டதோடு, பெட்டிக்கடை நடத்தியதோடு, வார்டு உறுப்பினராகவும் இருந்தார். கடந்த 2023 ஆகஸ்ட் 13ல் கீழநத்தத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் அவரை வெட்டி கொன்றது.
இந்த கொலையில் கீழ்நத்தத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி, இசக்கி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மாயாண்டி இன்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில் அவரை 4 பேர் கும்பல் வெட்டி கொன்றுதவிட்டு காரில் தப்பியுள்ளது. இதனால் ஜாதி ரீதியிலான பிரச்சனையில் கடந்த ஆண்டு ராஜாமணியை கொன்ற நிலையில் அதற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் நீதிமன்றம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.