கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கனகராஜ் சகோதரர் தனபால்!

post-img

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று சிபிசிஐடி முன்பாக ஆஜராகி வாக்குமூலம் தருவார் என கூறப்படுகிறது.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் 2017-ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. இக்கொலை கொள்ளையில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.


தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் 49 பேர் கொண்ட சிபிசிஐடி குழு இந்த விசாரணையை நடத்துகிறது. இந்த வழக்கில் கடந்த வாரம், உதகை நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


இவ்வழக்கில் மர்மமான முறையில் இறந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ஊடகங்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தனபால் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.


இதனிடையே தனபால் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், சிபிசிஐடி விசாரணைக்கு செல்ல விடாமல் தம்மை எடப்பாடி பழனிசாமி தரப்பு தடுக்கிறது எனவும் குற்றம்சாட்டி இருந்தார் தனபால்.


இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகும் தனபால், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Related Post