ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டிலுலே ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்நிலையில் 3 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று முடிந்துள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்களும், இங்கிலாந்து அணி 237 ரன்களும் எடுத்திருந்தன. இதையடுத்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 67.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ்ஹெட் 77 ரன்களும், உஸ்மான் கவாஜா 43 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். நேற்று முன்தினம் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் க்ராவ்லே 9 ரன்னும், பென் டக்கெட் 18 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். நேற்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கியபோது, பென் டக்கெட் 23 ரன்னிலும், மொயின் அலி 5 ரன்னிலும் ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினர்.
ரன்கள் உயர்ந்த அதே வேகத்தில் விக்கெட்டுகளும் விழுந்ததால் ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. ஜோ ரூட் 21 ரன்னும், ஸாக் க்ராவ்லே 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடிய ஹேரி ப்ருக் 93 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இங்கிலாந்து 230 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது இன்னும் 24 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டதால் ஆட்டம் த்ரில்லராக மாறியது.
அப்போது பவுலர் கிறிஸ் வோக்ஸ் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். மார்க் வுட் அதிரடியாக 8 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி இலக்கான 254 ரன்களை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பதிவு செய்துள்ளது.