சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூதன முறையில் போராட்டம் நடத்தும் வகையில் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 23ஆம் தேதி அந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கட்டிடத்தின் பின்புறம் தனது நண்பருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டியிருக்கிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் அந்த வீடியோவை அனுப்பிவிடுவேன் எனச் சொல்லி, அந்த மாணவியை வன்கொடுமை செய்திருக்கிறார்.
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் மீது ஏற்கனவே இதுபோல பல புகார்கள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு எதிராக பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். பாஜகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
இதற்கிடையே அவர் #ShameOnYouStalin என்ற ஹேஷ்டேக் உடன் மற்றொரு ட்வீட்டையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், "ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை. மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் ஸ்டாலின் அவர்களே?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து அந்த பெண் அளித்திருந்த புகாரின் எஃப்ஐஆர் விவரங்கள் ஆன்லைனில் வெளியானது. பொதுவாக பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எந்தவொரு தகவலும் வெளியிடக்கூடாது. ஆனால், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எஃப்ஐஆர் விவரங்களில் மாணவியின் பெயர், முகவரி உட்பட அனைத்து விவரங்களும் இருந்தது சர்ச்சையானது.
இதைக் கண்டித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் முழு பொறுப்பு" என்று சாடியுள்ளார்.
பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆன்லைன் புகாரை யாரும் பார்க்காதபடி சென்னை போலீசார் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.