பானிபுரி வியாபாரி கூட நிம்மதியா வாழ்றான்.. ஆனால் அரசு ஊழியர்கள்? மேடையிலேயே புலம்பிய தாசில்தார்

post-img
பெங்களூர்: பானிபுரி, கோபி மஞ்சூரியன் விற்பனை செய்பவன் கூட மனைவி, பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்கிறான். ஆனால் நம்மால் மனைவி, பிள்ளைகளை கோவிலுக்கு கூட அழைத்து செல்ல முடியாத நிலை உள்ளது என்று அரசு வேலையில் இருக்கும் பணி அழுத்தம் பற்றி மேடையில் தாசில்தார் ஒருவர் புலம்பி உள்ள வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புராவில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கேகே கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தனது பணிக்கு கொடுக்கப்படும் அழுத்தம் பற்றியும், பானிபுரி விற்பவன் கூட மனைவி, பிள்ளைகளுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் நாம் அப்படி இல்லை என்று புலம்பி தள்ளிய வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கேகே கிருஷ்ணமூர்த்தி பேசும்போது கூறியதாவது: நான் தாசில்தாராக பணியாற்றி வருகிறேன். ஒரு தாலுகாவின் நிர்வாகத்தை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது அரசு பணியே வேண்டாம் என்ற மனநிலை எனக்கு வந்துள்ளது. என் மனதில் இருந்து சொல்ல வேண்டும் என்றால் பானிபுரி, கோபி மஞ்சுரியன் கடை வைத்து விற்பனை செய்பவர் நம்மை விட சுகமான, நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். பானிபுரி விற்பவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் வாழ்க்கை நடத்துகிறார். மனைவி, பிள்ளைகளை அவர்கள் விரும்பும் ஊர்களுக்கு அழைத்து சென்று வருகின்றனர். ஆனால் நம் துரதிர்ஷ்டம் மனைவி, பிள்ளைகளை அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய கூட முடியாத நிலை உள்ளது. அந்த அளவுக்கு நமக்கு பணி நெருக்கடி உள்ளது. சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறதோ அதன்படி வேலை செய்வது தான் நமது கடமை. அனைத்து துறைகளின் நலத்திட்டங்களை நாம் தான் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இப்போது செல்போனிலேயே நம் பணியை கண்காணித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். பணி பெரும் சுமையாக மாறி உள்ளது. அதனை முடிக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். பணி குறித்த அப்டேட்டுகளை வாட்ஸ்அப்களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் ரிப்போர்ட் செய்ய வேண்டி உள்ளது. பாருங்கள் எவ்வளவு சித்ரவதையை அனுபவிக்க வேண்டி உள்ளது. நான் 14 ஊழியர்களுடன் பணிசெய்கிறேன். கிராம கணக்காளர்கள் மக்காக உள்ளனர். இப்படியான சூழலில் எனக்கு 25 பணிகளை கொடுத்து முடியுங்கள் என்கிறார்கள். அந்த பணிக்கு காலஅவகாசம் தந்தால் பரவாயில்லை. காலஅவகாசம் தராமல் பணியை முடிக்கும்படி கூறி மனதளவதில் துன்புறுத்துகிறார்கள். அதனை வெளியில் கூறவும் எனக்கு சக்தி இல்லை. பணியை முடிந்தவரை செய்து முடித்துவிட்டேன் என்று சொல்லவும் மனம் வரவில்லை. இப்படி எந்த தவறும் செய்யாமல் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யாரோ செய்த தவறுக்கு நம்மிடம் துறை ரீதியான விசாரணை நடத்துகிறார்கள். எப்ஐஆர் போடுகிறார்கள். இதற்கு முன்பு ஆசிரியர் தொழில் என்பது கவுரவம் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. என் மனைவி, நாத்தினி, சகோதரர் ஆசிரியராக உள்ளனர். பள்ளிக்கு முட்டை வரும்போது முட்டையின் சைஸ், நல்ல முட்டையா என்பதை பார்க்க சொல்கிறார்கள். இதனால் தலைவலியும், பிரஷரும் அதிகரிக்கிறது. அதோடு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வருகிறது.சிறுநீரகம்,கல்லீரல், இதயம் பாதிக்கப்படுகிறது. எவ்வளவு உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அந்த அதிகாரிகள் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மதிக்க வேண்டும்'' என்று புலம்பினார்.

Related Post