"நீ எங்கே இருக்கே சாமீ"? நீலகிரியில் "புல்லட்"டால் பறக்கும் டிரோன்.. யானை சாணத்தில் ஸ்பிரே? பரபரப்பு

post-img
நீலகிரி: ஒரே ஒரு இளம் ஆண் காட்டு யானையை பிடிக்க, ஒட்டுமொத்த வனத்துறை ஊழியர்களும் பந்தலூர் களமிறங்கி இருக்கிறார்கள்.. ஒருபக்கம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை, மறுபக்கம் யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை என வேறு வேறு வழிகளில், அந்த யானையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், சமீபகாலமாகவே 35-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன... இதில், புல்லட் என்று அழைக்கப்படும் யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.. புல்லட் யானை: தொடர்ந்து அங்கிருக்கும் குடியிருப்புகளை இடித்து, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தூக்கி சென்றுவிடுகிறது.. இந்த 2 மாதங்களில் மட்டும் மொத்தம் 35 வீடுகளை இடித்து, மனிதர்களையும் தாக்கி வருகிறது. இதனால் இந்த புல்லட் யானையை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கையை கடந்த வாரம் மேற்கொண்டனர். அப்போதும் 3 நாட்கள் தொடர்ந்து வீடுகளை அந்த யானை இடித்து வந்துள்ளது. இதனால், 2 கும்கி யானைகள் உதவியுடன், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில், 75 வன ஊழியர்கள் ஈடுபட்டார்கள். பயிர்கள் சேதம்: ஆனால், கும்கி யானைகளை பார்த்ததுமே, அந்த புல்லட் யானை காட்டுக்குள் ஓடிப்போய் பதுங்கி கொண்டதாம்.. இதனால். யானை வேறு பகுதிக்கு சென்று விட்டது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு, சேரம்பாடி "டான்டீ" என்ற பகுதிக்குள் மறுபடியும் அந்த புல்லட் யானை நுழைந்து, 6 வீடுகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போதுதான், அதே புல்லட் யானை, மறுபடியும் ஊருக்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால், வன பணியாளர்கள் மற்றும் 2 கும்கி யானைகள் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் நேற்று முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.. அரசு தேயிலை தோட்டத்தில் 8 காட்டு யானைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த புல்லட் யானை இன்னும் சிக்கவில்லை. காட்டு யானை: அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட அந்த இளம் ஆண் காட்டு யானை, அரிசிக்காகவே குடியிருப்புகளில் நுழைந்துவிடுகிறதாம்.. சிலசமயங்களில் நள்ளிரவில்கூட வீடுகளுக்குள் நுழைந்துவிடுவதாக பொதுமக்கள் அச்சத்துடன் சொல்கிறார்கள். அதனால்தான், டிரோன் மூலம் கண்காணிக்கும் பணியை தற்போது போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. மேலும், மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்கும் முயற்சியிலும் வன குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், மதம் பிடித்த யானையின் சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய் தூள் தடவப்பட்ட துணி தோரணம் என மாற்று வழிமுறைகளிலும் வனத்துறை இறங்கியிருக்கிறதாம். யானை சாணம்: அதாவது, யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுவதுடன், வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டப்பட்டிருக்கிறது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Post